கடல் நடுவே புத்தாயிரம் ஆண்டான 2000_த்தின் முதல் நாளான ஜனவரி 1 ஆம் தேதி அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி,கடல் நடுவே உள்ள பாறையில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். இந்த சிலையை உருவாக்கியவர் சிற்பி கணபதி ஸ்தபதி.
கலைஞரால் திறந்து வைத்த திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆவது ஆண்டை தொட்ட 2025 இல், திருவள்ளுவர் சிலை திறப்பு விழா எந்த இடத்தில் நடந்ததோ ,அதே இடத்தில், அன்றைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தது போல் அவரது மகனான இன்றைய முதல்வர் ஸ்டாலின்… திருவள்ளுவர் சிலைக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே ஆன கடல் பரப்பில் கண்ணாடிப் பாலத்தைத் திறந்து வைத்தார்.
தமிழக அரசின் ரூ.38 கோடி நிதிச்செலவில் கட்டப்பட்ட கண்ணாடிப் பாலத்தை கடந்த ஆண்டு, டிசம்பர் 31-ம் நாள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கண்ணாடிப் பாலம் திறப்பு விழா கண்டபோதும், பல்வேறு வகையான பணிகள் கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி பாலத்தின் மேல் புறத்தில் உயர்ந்த இரும்பு கம்பிகளால் ஆன குறுக்கு கம்பியில் இருந்து பணியாற்றிய தொழிலாளி ஒருவர் சுத்தியலை தவறவிட்டார். அந்த ‘சுத்தியல்’ கண்ணாடிப் பாலம் பகுதியில் விழுந்த நிலையில், விழுந்த வேகத்தில் ஒரேயொரு கண்ணாடியில் கீறல் விழுந்தது.
இதையடுத்து கண்ணாடிப் பாலத்தின் குறிப்பிட்ட பகுதியில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லக் கூடாது என பலகையால் மறைக்கப்பட்டிருந்தது.
குமரி மாவட்டம் மட்டும் அல்ல தமிழகம் கடந்து இந்தியா முழுவதும். கன்னியாகுமரி கண்ணாடி பாலம் பாதிப்பு என ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிகைகள் ஒவ்வொரு விதமான செய்தியை பரவ விட்டன.
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் கண்ணாடிப் பாலத்தை நோரில் பார்வையிட்டார்.
கண்ணாடிப் பாலத்தில் கீறல் என்ற செய்தி பரவ தொடங்கியதும் குமரி ஆட்சியர் அழகு மீனா உடனடியாக வெளியிட்ட செய்தியில், “கீறல் விழுந்த கண்ணாடி இருக்கும் பகுதி சுற்றுலா பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கை தகவலாகும். பாது காப்பு கருதி கீறல் ஏற்பட்ட பகுதி மட்டுமே பலகையால் மறைக்கப்பட்டுள்ளது
சுற்றுலா பயணிகள் எப்போதும் போல் கண்ணாடி பாலத்தை பார்வையிட எவ்விதமான தடையும் இல்லை” என அறிவித்தார்.
அதேநேரம் பொதுப்பணித்துறை ஊழியர்க்ளிடம் நாம் பேசுகையில், “கண்ணாடி பாலத்தில் ஒரு சுத்தியல் விழுந்ததில் கீறல் ஏற்பட்டுள்ளது. இதனால், அதன் திடத்தன்மை கேள்விக் குறியானதுடன், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெறும் பகுதியில் கண்ணாடி களை பாதுகாக்கும் வகையில் அதற்குரிய கவசங்களை கண்ணாடிகளின் மேல் பகுதியில் விரித்திருக்க வேண்டும். இதனை செய்ய அரசு தவறிவிட்டது, மாவட்ட நிர்வாகமும் ‘மெத்தனமாக’ இருந்துள்ளது.
கண்ணாடிப் பாலம் பராமரிப்பு கட்டணமாக மாதத்திற்கு ரூ.72 ஆயிரம் என ஆண்டுக்கு ரூ.8.65 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றுலா பயணிகளுக்கு சுகாதாரமான வகையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவும், கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இதை போன்று சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் கண்ணாடிப் பாலம் பராமரிப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார்கள்.
கண்ணாடிப் பாலத்தை கவனமாக கையாள வேண்டும் அரசு!