• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வீரபாண்டி ஆ.ராஜாவின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்த முதல்வர்

Byமதி

Dec 11, 2021

சேலம் ஸ்ரீ ரத்னவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற, வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும் கழகத் தேர்தல் பணிக்குழுச் செயலாளருமான மறைந்த வீரபாண்டி ஆ. ராஜா அவர்களின் திருவுருவப் படத்திறப்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பேசும்போது,

வீரபாண்டியார் அவர்களைப் போலவே தம்பி ஆ. ராஜா அவர்களும் கழகத் தொண்டர்கள் மனதில் எந்நாளும் வாழ்வார்!

கழகத்துக்காகப் பல கொடுமைகளைத் தாங்கி; தியாகம் செய்த குடும்பம் வீரபாண்டியாரின் குடும்பம்!

என்னுடைய அருமைத் தம்பி வீரபாண்டி ராஜா அவர்களுடைய திருவுருவப் படத்தினைத் திறந்து வைக்கும் அளவிற்கு ஒரு மோசமான சூழல் இவ்வளவு சீக்கிரம் வருமென்று நான் நினைத்துப் பார்க்கவில்லை.

மிக இளமைப் பருவத்திலேயே இவருடைய அண்ணன், வீரபாண்டியாருடைய மூத்த மகன் செழியனை நாம் இழந்தோம். மருத்துவமனை வாசலிலேயே தலைவர் கலைஞர் அவர்கள் வாய்விட்டு கதறும் அளவிற்கு நம்மை விட்டுப் பிரிந்தவர் அண்ணன் வீரபாண்டியார் அவர்கள். இதோ இப்பொழுது வீரபாண்டி ராஜாவும் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அவருடைய குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது? என்னை நானே எவ்வாறு தேற்றிக் கொள்வது? வீரபாண்டி ராஜா போன்றோர் மறைவு, ஒரு தனி மனித மறைவு அல்ல. நம் கழகத்தின் தூண் ஒன்று சாய்ந்து விட்டது என்றுதான் நாம் நினைக்க வேண்டும். எந்நாளும் அவர் புகழ் நிலைத்திருக்க வேண்டும். கழகத் தொண்டர்கள் எந்நாளும் மனதில் நிச்சயமாக, எவ்வாறு வீரபாண்டியார் வாழ்ந்து கொண்டிருக்கிறாரோ, அதேபோல ராஜாவும் நிச்சயமாக வாழ்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சென்னையில் இருக்கின்ற அண்ணா அறிவாலயம் மட்டுமல்ல, மற்ற மாவட்டங்களில் இருக்கக்கூடிய கலைஞர் அறிவாலயங்கள், அண்ணா அறிவாலயம் எதுவாக இருந்தாலும் அவை எல்லாம் கல்லாலும் செங்கல்லாலும், சிமெண்டாலும் கட்டப்பட்டவை மட்டுமல்ல. இத்தகைய தியாக மறவர்களால், இவர்கள் சிந்திய இரத்தத்தால், இவர்கள் சிந்திய வியர்வையால் கட்டப்பட்டது என்பதை யாரும் மறுக்கவே முடியாது. இவர்கள் செய்த தியாகத்தால்தான் இன்றைக்கு நாம் கோட்டையில் உட்கார்ந்து இருக்கிறோம். ஆட்சியில் இருக்கிறோம். ஆளுங்கட்சியாக இருக்கிறோம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. மக்களுக்கு சேவையாற்ற ஆட்சி முக்கியம். அந்த ஆட்சியைக் கைப்பற்றவும் காக்கவும் கட்சி முக்கியம். எனவே கட்சிக்கு வேராகவும், இந்த கட்சிக்குத் தூணாகும் இருந்து உயிர் விட்ட தியாகிகளை மதிப்போம். மறவோம். தம்பி ராஜாவின் புகழ் வாழ்க… வாழ்க… வாழ்க… என்று கூறி நிறைவு செய்கிறேன். வணக்கம்.