பாஜக மூத்த தலைவராக விளங்கியவரும், நாகாலாந்து மாநில ஆளுநருமான இல. கணேசன், இன்று (ஆகஸ்டு 15) அன்று மாலை காலமானார்.
சென்னையில் உள்ள தனது வீட்டில் கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி மயங்கி விழுந்த இல.கணேசன், தலையில் காயமடைந்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒருவாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இல.கணேசன், இன்று மாலை காலமானார். அவருக்கு வயது80.

தஞ்சை மாவட்டத்தில் 16 பிப்ரவரி 1945-ம் ஆண்டு லக்குமி ராகவன் – அலமேலு தம்பதிக்கு பிறந்தவர்.
பள்ளி மாணவராக இருக்கும்போதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டு பொதுவாழ்வுக்கு வந்தவர் இல.கணேசன். அரசுப் பணியில் இருந்து ஒரு கட்டத்தில் விலகி முழு நேர ஆர்.எஸ்.எஸ், ஊழியரானார். திருமணம் செய்துகொண்டால் குடும்பம் என்பது இயக்கப் பணிக்கு இடையூறாகும் என்று திருமணத்தைத் தவிர்த்தார்.
இல.கணேசன் சிறந்த இலக்கியவாதி, பரப்புரையாளர். 1991-ல் பாஜக அமைப்பு செயலாளர் ஆனார். 2009, 2014 மக்களவை தேர்தல்களில் தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். அரசியல்வாதியாக இருந்த அதேநேரம், ’பொற்றாமரை’ என்ற இலக்கிய வட்டத்தை கட்சி கடந்த நட்போடு செயல்படுத்தினார்.
மத்திய பிரேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு மாநில பாஜக தலைவர், பாஜக தேசிய செயலாளர், தேசிய துணைத்தலைவர், தமிழ்நாடு தலைவர் என பல பொறுப்பு வகித்தவர். மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்தவர், பின் நாகலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
“நாகாலாந்து ஆளுநர் திரு, இல. கணேசன் ஜி அவர்களின் மறைவால் துயரம் அடைகிறேன். சேவை மற்றும் தேசக் கட்டுமானத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு பக்தியுள்ள தேசியவாதியாக அவர் நினைவுகூரப்படுவார்.
தமிழ்நாடு முழுவதும் பாஜகவை விரிவுபடுத்த அவர் கடுமையாக உழைத்தார். தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது.
அவரது குடும்பத்தினர் மற்றும் அபிமானிகளுக்கு என் இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.
இல. கணேசன் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




