பொது சுகாதாரத் துறையில் தடுப்பூசி பணியில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை செவிலியர் கூட்டமைப்பு மாநில தலைவர் பா.நிர்மலா செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது,

“நாடு தழுவிய தடுப்பூசி திட்டம் 1985ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 40 வருடங்களாக தடுப்பூசி பணியில் கிராம சுகாதார செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். துணை சுகாதார மையங்களில் தடுப்பூசி பணியில் அனுபவமற்ற ஒப்பந்த செவிலியர்களை ஈடுபடுத்தக் கூடாது. 40 ஆண்டுகால அனுபவமிக்க கிராம சுகாதார செவிலியர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும்.
- துணை சுகாதார மையங்களில் ஒப்பந்த செவிலியர்களை எம்.எல்.எச்.பி யாக நியமனம் செய்வதை கைவிட வேண்டும்.
- துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்யக்கூடாது.
- புதிதாக துவங்கப்பட உள்ள 642 துணை சுகாதார நிலையங்களுக்கும் கிராம சுகாதார செவிலியர் பணியிடம் வழங்க வேண்டும்.
- காலியாக உள்ள 4000 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
- பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
என பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தி ஜூலை 1ம் தேதி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்துறை முறையீடு போராட்டம் நடத்தவும், இரண்டாம் கட்டமாக மாநில அளவிலான போராட்டம் சென்னையில் நடத்தப்படும்” என தெரிவித்தார்.








