திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருணாச்சலபுரத்தை சேர்ந்தவர் முனியப்பன் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மகன் முனீஸ்வரன்(11) வத்தலகுண்டில் அரசு உதவி பெறும் ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை பள்ளி சென்ற மாணவனை முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மாணவனின் கழுத்தை கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்றதாக தகவல் பரவியது கழுத்தில் ரத்தக்காயத்துடன் இருந்த பள்ளி மாணவன் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.
தன்னை இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் கத்தியால் வெட்டி விட்டு சென்றதாக அந்த மாணவன் அனைவரிடமும் கூறினான்.

இந்தச் சம்பவம் வத்தலக்குண்டில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்ட வத்தலக்குண்டு போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை சோதனையிட்டபோது பள்ளி மாணவன் கூறிய சம்பவம் உண்மைக்கு புறம்பானது என தெரியவந்தது.
மீண்டும் போலீசார் பள்ளி மாணவரிடம் நடத்திய விசாரணையில் அறிவியல் வீட்டுப்பாடம் எழுதாமல் பள்ளிக்கு சென்றதாகவும் ஆசிரியர் தன்னை கண்டிப்பார் என்ற அச்சத்தில் தானே பிளேடால் கழுத்தை தனது அறுத்துக் கொண்டதாக அந்த மாணவன் கூறியுள்ளான். இதை தொடர்ந்து போலீசார் மேலும் அச்சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டுப்பாடம் எழுதாததை மறைக்க பள்ளி மாணவன் நடத்திய நாடகம் தற்போது அம்பலம் ஆகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








