• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மொபைலில் க்யூஆர் கோடு எப்படி உருவானது?

Byவிஷா

May 8, 2025

உலகம் முழுவதும் ஆக்கிரமத்துள்ள க்யூஆர் கோடு எப்படி உருவானது? யார் அதைக் கண்டுபிடித்தனர் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். வாருங்கள்!
தற்போதைய டிஜிட்டல் உலகில் க்யூஆர் குறியீடு தான் உலகம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளன. பெட்டிக் கடைகளில் இருந்து பெரிய பெரிய ஹோட்டல்கள் வரை என அனைத்து இடங்களிலும் கியூஆர் கோடு வந்துவிட்டது. இதனால், மிக எளிதாக பணம் அனுப்ப முடிகிறது. இந்த கருப்பு ,வெள்ளை சதுரங்கள் மக்களின் வாழ்க்கையை எளிதாக மாற்றியுள்ளது. ஆனால், இந்த கியூஆர் கோடு கண்டுபிடிப்புக்கு பின்னால் உள்ள கதை மிகவும் சுவாராஸ்யமானது.
க்யூஆர் கோடை கண்டுபிடித்தவர் ஜப்பானிய பொறியாளரான மசா ஹிரோ ஹரா ஆவார். இவர், டென்சோ வேவ் நிறுவனத்தின் பொறியாளர் ஆவார். 1994ஆம் ஆண்டு ஜப்பானிய நிறுவனமான டென்சோ வேவ் நிறுவனத்தில் இவர் ஆட்டோமொபைல் பாகங்களை லேபிளிங் செய்வதற்காக இந்த கியூஆர் கோடை கண்டுபிடித்தார்.
க்யூஆர் குறியீடு உருவாக்கப்பட்டது எப்படி..?
பாரம்பரிய பார் கோடுகள் அனுமதிக்கும் தகவல்களை விட அதிகமான தகவல்களை சேமித்து ஸ்கேன் செய்வதற்கு ஒரு சிறந்த வழி வேண்டும் என்பதை பொறியாளர் மசா ஹிரோ ஹரா உணர்ந்தார். இதையடுத்து, சதுர கட்டத்திற்குள் இருக்கும் கருப்பு, வெள்ளை துண்டுகளை பயன்படுத்தும் ‘கோ’ என்ற கிளாசிக் ஜப்பானிய போர்டு விளையாட்டில் இருந்து அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இது எந்த கோணத்தில் இருந்தும் ஸ்கேன் செய்யக்கூடிய இரு பரிமாண குறியீட்டிற்கான அந்த யோசனையை அவருக்கு வழங்கியது.
பின்னர், தனது குழுவுடன் பல மாதங்கள் கடின உழைப்புக்கு பிறகு 1994ஆம் ஆண்டு இந்த கியூஆர் குறியீட்டை உருவாக்கினார். பழைய பார் கோடுகளைப் போல் அல்லாமல் க்யூஆர் குறியீடுகள் அதிக தகவல்களை வைத்திருக்க முடியும். மேலும், எழுத்துக்கள் மற்றும் எண்கள் கூட வைத்திருக்க முடியும். எந்த திசையில் இருந்தும் உடனடியாக ஸ்கேன் செய்ய முடியும்.
முதலில் இந்த க்யூஆர் குறியீடுகள் தொழிற்சாலைகளில் கார் பாகங்களை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டன. ஆனால் ஷாப்பிங் மால், மருத்துவமனைகள், போக்குவரத்து, திரைப்படங்கள் என அனைத்து இடங்களுக்கும் பரவியது. டெவலப்பர்கள், வணிகங்கள் இலவசமாக பயன்படுத்தத் தொடங்கின. இந்த கியூஆர் குறியீடு ஒரு தொழில்நுட்பமாக மாறினாலும் ஹராவும், அவரது குழுவினரும் ஒரு போதும் பணம் சம்பாதிக்கவில்லை. ஏனென்றால், அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என அவர்கள் விரும்பினர்.