• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோயில் திருவிழாவில் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத வழிபாடு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மறவபட்டியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் சேற்றில் நனைத்த துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் விநோத வழிபாடு நடைபெற்றது.‌

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா மூன்று நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்இரண்டு நாட்களில் மற்ற கோயில்களைப் போல பொங்கல் வைத்தல், முளைப்பாரி, தீச்சட்டி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறும்.
நிறைவு நாளில் மாமன், மைத்துனர்கள் ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.

இன்று மூன்றாம் நாள் திருவிழா என்பதால் துடைப்பத்தால் அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக ஒருவரை ஒருவர் கயற்றினால் கட்டிக் கொண்டனர். பின்பு கோயில் முன்பு படுத்தபடி அம்மனை வணங்கிவிட்டு பின்பு சேற்றில் உருண்டனர். தொடர்ந்து தலையில் மஞ்சள்துணி, பலூன் போன்றவற்றை கட்டிக்கொண்டு துடைப்பத்தை சேற்றில் நனைத்து ஒருவரை ஒருவர் விரட்டிச் சென்று அடித்துக் கொண்டனர்.

இந்த வினோதமான நிகழ்ச்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து இக்கிராம மக்கள் கூறுகையில்..,

இந்த வழிபாடு மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மனவேறுபாடுடன் இருக்கும் உறவு மீதான பிரியம் வலுப்பெறும் என்றனர். இந்த வினோதமான வழிபாட்டில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் வந்து பார்த்தனர்.