• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

வாழ்த்துகள் செல்லங்களா… தமிழ்நாட்டில் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!

ByP.Kavitha Kumar

Mar 28, 2025

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று காலை தொடங்குகிறது. இத்தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர்.

தமிழ்நாட்டில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த 3-ம் தேதி தொடங்கி கடந்த செவ்வாய்க் கிழமை நிறைவு பெற்றது. இதேபோல், பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 5-ம் தேதி தொடங்கிய நிலையில், அவர்களுக்கு நேற்றுடன் முடிவடைந்தது இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த பொதுத்தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 பள்ளி மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 48 ஆயிரத்து 426 பேரும், தேர்வு கண்காணிக்கும் பணியில் 4 ஆயிரத்து 858 பேரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற உள்ளது.

மேலும் தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 858 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு முடிவு மே 19-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.