உலக மகளிர் தின விழா புதுச்சேரி மாநில அதிமுக மகளிர் அணி சார்பில் உப்பளத்தில் உள்ள தலைமை கழகத்தில் மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் தலைமையில் கேக் வெட்டி, கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாநில மகளிர் அணி செயலாளர் விமலாஶ்ரீ முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு தையற் மிஷின், கிரைண்டர், மிக்சி, குக்கர், தவா, மின் அடுப்ப, கேஸ் அடுப்பு,ஹாட் பாக்ஸ், புடவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் பேசியதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். 1975-ம் ஆண்டில் இருந்து சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்தில் பெண் என்பவர் அந்த குடும்பத்தின் மைய கரு போன்றவர். ஒரு குடும்பத்தின் நலன் என்பது அந்த குடும்பத் தலைவியின் கையில் தான் உள்ளது. ஒரு குடும்பத்தின் பெருமையே அந்த குடும்ப தலைவியை சார்ந்தே இருக்கும். மகளாக, மனைவியாக, தாயாக என வாழ்வில் நீக்கம் மற நிறைந்திருப்பது பெண்கள் தான்.
ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவர் மீதும் தாய் மட்டுமே பாசத்துடன் அன்பு செலுத்துவார். மாசு மறுவற்ற உண்மையான அன்பினை கருத்தில் கொண்டு அந்த குடும்ப உறுப்பினர்களால் தெய்வமாக அந்த தாய் மதிக்கப்படுவார்.
ஆணாதிக்கமிக்க அரசியல் அரங்கில் தனி ஒரு பெண்மணியாக புரட்சித் தலைவரின் மறைவிற்கு பிறகு பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், அதிமுகவை வழிநடத்தி இந்திய அரசியல் அரங்கில் பெண்ணினத்திற்கு எடுத்துக்காட்டாக, தைரியமாக, இரும்பு மங்கையாக, வாழ்ந்து காட்டியவர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆவார்.
அவரது ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு சம உரிமை அளித்து, பெண்ணினம் தலைநிமிர்ந்து நடக்க வழி செய்தவர் புரட்சித் தலைவி அம்மா. பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் அதிகப்படியான பெண்கள் போட்டியிட வாய்ப்பளித்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். உள்ளாட்சி தேர்தலில் பாதி இடங்களில் பெண்கள் போட்டியிட உரிய சட்டத்தை கொண்டு வந்தவர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள். தனது ஆட்சிக்காலத்தில் கருவறையிலிருந்து வாழ்வு முடிவு பெறும் நாள்வரை பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் பெண்ணினத்தை பாதுகாத்தவர்.

தொட்டில் குழந்தை திட்டம், மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் சிறப்புக் காவல் படை, தாலிக்குத் தங்கம், இலவச திருமணம்,வளைகாப்பு, மகப்பேறு காலகட்ட உதவிகள், பெண் குழந்தைகளுக்கான பரிசுப் பெட்டகங்கள், கல்வி பயிலும் பெண்களுக்கு லேப்டாப். மான்ய விலையில் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர்.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு கழக ஆட்சியை வழிநடத்திய முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செயல்படுத்தினார். கல்வி பயிலும் கல்லூரி பெண்களுக்கும் மற்றும் பணிகளுக்கு செல்லும் பெண்களுக்கு இலவச இருசக்கர வாகனத்தை வழங்கினார்கள் அரசு பணியிடத்தில் பெண்களுக்கு தனி இடஒதுக்கீட்டை வழங்கிய பெருமை கழக ஆட்சியையே சாரும்.
தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி என்பது பெண்கள் நலனுக்கு எதிரான ஆட்சியாகும். பெண்களுக்கு அனைத்து நிலைகளிலும் பாதுகாப்பற்ற ஒரு அரசை திமுக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் நடத்தி வருவது வெட்கக்கேடானதாகும். தமிழகத்தில் தினந்தோறும் பாலியல் வன்முறைகள், சிறுமிகள் பலாத்காரம், கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் திமுக எப்பொழுது ஆட்சிக்கு வந்தாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை ஏற்படும். இன்று தமிழகத்தில் வீட்டை விட்டு தொழில்புரிய வெளியில் வரும் பெண்கள் நமக்கு என்ன நடக்குமோ என்ற பயம்கலந்த பீதியுடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மகளிர் தின விழா புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதுபோன்ற விழா மூலம் சமூக சமுதாயத்தில் பல்வேறு நிலைகளிலும் பாதிக்கப்படும் பெண்களுக்கு விடிவு ஏற்படப்போவதில்லை. எனவே அரசு பெண்களின் பாதுகாப்பு, பெண்களின் உரிமை இவற்றில் அதிக கவனம் செலுத்தி கண்காணிப்புடன் செயல்பட வேண்டும்.
இன்றைய மாறி வரும் சமுதாயத்தில் ஆணுக்கு நிகராக குடும்ப பாரத்தை சுமக்க பெண்கள் மிகவும் சிரமத்துடன் தினசரி நாட்களை கழிக்கின்றனர். பணி செய்யும் இடத்தில் மகளிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. பொது இடத்தில் கன்னியத்துடன் செல்லும் பெண்களை கூட தவறான பார்வையினால் துளைத்தெடுக்கும் சீர்கெட்ட சமூகமாக மாற்றப்பட்டுள்ளது.
சுற்றுலா என்ற பெயரில் மகளிர்களை மையப்படுத்தி சமுதாய சீர்கேடுகளை சுதந்திரமாக ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலையை அரசு உருவாக்கியுள்ளது. பணி செய்யும் பெண்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கு உரிய சட்டப்படியான தினக்கூலி ஊதியம் கூட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக வியாபார கடைகளில் வழங்கப்படுவதில்லை. ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக குடும்ப பெண்கள் பணி செய்ய கூடிய சூழ்நிலையை அரசு கண்டும் காணாமல் உள்ளது.

இரவு நேரத்தில் 60 வயதை கடந்த முதிய பெண்கள் இன்றைக்கும் துப்புரவு பணி செய்யக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு இன்றுவரை புதுச்சேரி அரசால் நீதி வழங்கப்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசாக இருந்தாலும் பெண்களுக்கு பாதுகாப்பும், முன்னுரிமையும் அளிக்கும் அரசாக இருக்க வேண்டும். தினசரி மனரீதியிலும், உடல் ரீதியிலும் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு இந்த சமுதாயத்தில் நல்வாழ்க்கையை வாழும் பெண் சமுதாயத்தினருக்கு மீண்டும் மகளிர் தின நல்வாழ்த்துக்களை அதிமுக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் எஸ். வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், ஆர்.வி.திருநாவுக்கரசு, மாநில கழக பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்நாகமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.