உசிலம்பட்டியில் பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலின் மாசி பெட்டிகள் எடுப்பு விழாவில் ஆணி செருப்பில் நடந்து வந்த பூசாரிகள், பெட்டிகளை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலின் மாசி சிவராத்திரி திருவிழா கடந்த 26ஆம் தேதி துவங்கியது, இந்த மகா சிவராத்திரி திருவிழாவிற்காக உசிலம்பட்டி சின்னகருப்ப சாமி கோவிலிலிருந்து ஒச்சாண்டம்மன் ஆபரணங்கள் அடங்கிய புகழ்பெற்ற மாசி பெட்டிகள் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலுக்கு எடுத்து சென்று சிவராத்திரி பூஜைகள் நடைபெற்றன.

சிவராத்திரி முடிந்து பின் உசிலம்பட்டி திரும்பிய மாசி பெட்டிகள் நேற்று இரவு வடகாட்டுபட்டியில் உள்ள பெட்டி வீட்டில் தங்க வைத்துவிட்டு, இன்று மீண்டும் உசிலம்பட்டியில் உள்ள சின்னகருப்ப சாமி கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
உசிலம்பட்டி நகர் பகுதியில் வந்த பெட்டிகளை அய்யன் மற்றும் மாயாண்டி சுவாமி ஆடும் பூசாரிகள் ஆணி செருப்பு அணிந்து பெட்டிகளை அழைத்து வர உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசாரும் ஆதி வழக்கப்படி பூசாரிகள் மற்றும் மாசி பெட்டிகளுக்கு மரியாதை செய்து வரவேற்றனர்.
இந்நிகழ்வை காண உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலிருந்து பெட்டிகள் வரும் வழி நெடிகிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று தரிசனம் செய்தனர்.
இறுதியாக பெட்டிகள் சின்னகருப்பு சாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
