மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே அம்பேத்கர் உருவப் படம் கிழித்து சேதப்படுத்திய மர்ம நபர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை உடைத்து தூக்கி எறிந்ததை, கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சாலை மறியல் மற்றும் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே குறிச்சி கிராமத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிகழ்ச்சி ஒன்றிற்காக அம்பேத்கர் படம் போட்ட மிகப்பெரிய பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. நேற்று அந்த பேனரில் இருந்த அம்பேத்கர் உருவப்படத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதுடன் அருகில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை உடைத்து ராஜன் வாய்க்கால் உட்புறம் விசி எறிந்து உள்ளனர். தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் குமார் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மணல்மேடு வைத்தீஸ்வரன் கோயில் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் இது போன்ற வன்முறையில் ஈடுபடுவதாகவும், அம்பேத்கர் படம் கிழிக்கப்பட்டு தங்கள் கொடிக்கம்பம் உடைக்கப்பட்ட சம்பவத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ள மோகன்குமார், இது குறித்து மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.