தாய்லாந்தில் சர்வதேச யோகாசன போட்டிகளுக்கு தயாராக மாணவர்களுக்கு பயிற்சி முகாம் தேனி மாவட்ட யோகாசன சங்கம் நடத்தியது.
பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் யோகாசன போட்டிகளுக்கு, தயார்படுத்தும் முகாம் மதுரை அருகே கிண்ணிமங்கலத்தில் நடைபெற்றது.
அடுத்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாநில அளவிலான போட்டியும், அதற்கடுத்து ஜூன் மாதம், தாய்லாந்தில் சர்வதேச போட்டிகளும் நடக்க உள்ளன. இதில் தமிழ்நாட்டில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு மாணவர்கள் பங்கேற்கின்றனர். ஏற்கனவே மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், அடுத்த கட்ட போட்டிகளுக்கு தயார் படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கிண்ணிமங்கலம் 18 சித்தர்கள் ஆலய வளாகத்தில், தேனி மாவட்ட யோகாசன சங்கத்தின் சார்பாக மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற போட வேண்டிய யோகாசன நிலைகள், ஒவ்வொரு ஆசனமும் எந்த முறையில் போட வேண்டும், எவ்வளவு நேரங்கள் இருக்க வேண்டும், சுவாசம் எப்படி இருப்பது உள்ளிட்ட பயிற்சிகள் மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது.
யோகா பயிற்சியாளர்கள் கம்பம் யோகா ராஜேந்திரன், யோகா ரவிராம் மாணவர்களுக்கு இந்த பயிற்சிகளை வழங்கினர். அப்போது, நடத்தப்பட்ட மாதிரி போட்டிகளுக்கு பயிற்சியாளர்கள் முருகன், குமார் ஆகியோர் நடுவர்களாக இருந்து பயிற்சி அளித்தனர்.
திறம்பட பயிற்சி செய்த மாணவ, மாணவர்களுக்கு சித்தர்கள் ஆலயத்தை சேர்ந்த அருளானந்த சுவாமி பரிசுகள் வழங்கினார்.