• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மதுரையில் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த மறுத்து முற்றுகை போராட்டம்..!

Byவிஷா

Nov 13, 2021

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளுர் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த முடியாது என முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றி அதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், உள்ளுர் வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால் உள்ளுர் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்தை கட்டமாட்டோம் என இப்பகுதி பொதுமக்கள் மறுத்து வருவதோடு., அவ்வப்போது சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.


இதையடுத்து கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், உள்ளுர் வாகனங்கள் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் உள்ளுர் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்தச் சொல்லி வலியுறுத்தியதால் 4 நாட்களுக்கு முன்பு வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில் தற்போது சுங்கச்சாவடி கட்டணத்திற்கு நிரந்தரமான தீர்வு வேண்டும் எனக் கோரி சுங்கச்சாவடியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராடி வருவதால் சுங்கச்சாவடி வழியாக கன்னியாகுமரி, தென்காசி, சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம், கேரளா ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.


மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.