இந்தியாவிலேயே டெல்லியில்தான் அதிகபட்சமாக 126 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை டெல்லியில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியின் முங்கேஷ்பூரில் உள்ள வானிலை நிலையம், இன்று பிற்பகல் 2.30 மணியளவில் 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்தது. இது இந்தியாவில் இதுவரை பதிவாகாத மிக அதிகபட்சமான வெப்பநிலை ஆகும்.
டெல்லியில் இன்றைய உயர் மின் தேவை 8,302 மெகாவாட் (ஆறு) என வெப்ப அலைகளுக்கு மத்தியில் அறிவிக்கப்பட்டது. கடுமையான வெப்பம் காரணமாக மக்கள் அதிகளவில் குளிர்சாதன பெட்டியை இயக்கியதால் தேவை அதிகரித்ததாக மின்சாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலைவன மாநிலமான ராஜஸ்தானின் பலோடியில் 51 டிகிரி செல்சியஸ் மற்றும் 50.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது. ஹரியானாவில் உள்ள சிர்சாவில் 50.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அரபிக்கடலில் இருந்து ஈரமான காற்று ஊடுருவல் காரணமாக தென் ராஜஸ்தான் மாவட்டங்களான பார்மர், ஜோத்பூர், உதய்பூர், சிரோஹி மற்றும் ஜலோர் ஆகிய மாவட்டங்களில் இன்று 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்து பதிவாகியுள்ளது. எனவே வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வங்காள விரிகுடாவில் இருந்து நாளை முதல் ஈரமான காற்று ஊடுருவுவதால், உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நேற்று முங்கேஷ்பூர் மற்றும் வடக்கு டெல்லியின் நரேலாவின் அதிகபட்ச வெப்பநிலை 49.9 டிகிரி செல்சியஸாக இருந்தது.
இந்தியாவிலேயே டெல்லியில் அதிக வெப்பம் பதிவு
