• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

மதுரையில் கனமழைக்கு வீடு இடிந்து விழுந்து ஒருவர் பலி

Byவிஷா

May 17, 2024
மதுரையில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஒரு வீட்டின் கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று மதுரை அண்ணாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்நிலையில் மதுரை வைகையாற்றை ஒட்டியுள்ள மதிச்சியம் சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (44) என்பவர் நேற்றிரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். 
அப்போது திடீரென மழை காரணமாக வீட்டின் கான்கிரீட் மேற்கூரை முழுவதுமாக பெயர்ந்து வீட்டிற்குள் விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். வீடு இடிந்து விழுந்த சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் மதிச்சியம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பாலசுப்ரமணியனின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். பாலசுப்பிரமணியம் தனது குடும்பத்தினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று சுவர் இடிந்து  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மதிச்சியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.