• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே குழந்தைகளுக்கு பரவி உள்ள மர்ம காய்ச்சல் – சிறப்பு முகாம்களை அமைக்க எம்எல்ஏ அய்யப்பன் கோரிக்கை

ByP.Thangapandi

Feb 8, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வரும் சூழலில் 3 வயது ஆண் குழந்தை ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்தடுத்து பரவிய மர்ம காய்ச்சலால் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகளும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 2 குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த காய்ச்சல் குறித்து அறிந்து கொள்ள குழந்தைகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பிய மருத்துவர்களுக்கு இந்த காய்ச்சல் எலிக் காய்ச்சல் என பரிசோதனை முடிவு வந்துள்ளதாக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.

மேலும் எலி காய்ச்சலுக்கான மருந்துகள் உள்ள நிலையில் குழந்தைகள் நல மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் மூலம் இக் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் இந்த குழந்தைகளை நேரில் ஆய்வு செய்து மருத்துவர்களிடம் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்த உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்., எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து அதிநவீன சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், இந்த காய்ச்சல் பரவாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து சிறப்பு முகாம்களை நடத்தி மலைவாழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என பேட்டியளித்தார்.

மேலும் என்ன காய்ச்சல் என தெரியாத நிலையில் எங்கள் குழந்தைகள் அவதிப்பட்டு வருவதாகவும், எங்கு எங்களது குழந்தைகளை இழந்துவிடுவோமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் மருத்துவ முகாம்களை அமைத்து மலைவாழ் மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய் வேலாயி வேதனையுடன் வேண்டுகோள் விடுத்தார்.