• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொன்முடியின் சொத்துகளை முடக்க வேண்டிய அவசியம் இல்லை.., உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Byவிஷா

Dec 22, 2023

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் இல்லை என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2006-11 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது உயர்கல்வி மற்றும் கனிம வள அமைச்சராக பொன்முடி இருந்தார். பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் செப்டம்பரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரது சொத்துக்களையும் லஞ்ச ஒழிப்பு துறை முடக்கிறது.
ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2006 ஏப்ரல் 13 முதல் 2010 மே 13 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக கூறப்பட்டது. இது வருமானத்தை விட 65.99 சதவிகிதம் அதிகம் ஆகும். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. இதில் 2006 ஏப்ரல் 13 முதல் 2011 மே 14 வரையிலான காலமாக மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் 2016 ஏப்ரலில் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 2017ல் மேல் முறையீடு செய்தது. மேலும் அதில் சொத்துக்களை முடக்க வேண்டும் என்றும் தனித்தனியாக இரண்டு வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். இந்த மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் டிசம்பர் 19ஆம் தேதி தீர்ப்பளித்தார். அதில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இருவருக்கும் தலா 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தண்டனை 1 மாத காலம் நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்துள்ளார். இதனால் பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார். இந்நிலையில் இன்று அவரது சொத்துக்களை முடக்கும் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதில் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறு. ஆனால் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால் தேவையென்றால் லஞ்ச ஒழிப்புத்துறை சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.