• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இரண்டு விருதுகள் பெற்ற பொன்னேரி அரசு மருத்துவமனை..!

Byவிஷா

Aug 24, 2023

பொன்னேரி அரசு மருத்துவமனை மத்திய, மாநில அரசுகளின் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு மத்திய அரசின் இரண்டு விருதுகள் கிடைத்ததை முன்னிட்டு மருத்துவமனையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பொன்னேரியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு என பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. நாள் தோறும் 1000க்கும் மேற்பட்ட பொது மக்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை, நிர்வாகம், பராமரிப்பு உள்ளிட்டவைகள் குறித்து கடந்த, பிப்ரவரி மாதம் மத்திய சுகதாரத்துறையின் கீழ் செயல்படும் தேசிய தரஆய்வு நிபுணர் குழு, ஆய்வு மேற்கொண்டது. இதில், புறநோயாளிகள், உள்நோயாளிகள், மகப்பேறு, மருந்துகம், அவசர சிகிச்சை பிரிவு, ஆய்வகம், பிரேத பரிசோதனை உள்ளிட்ட, 13பிரிவுகளை ஆய்வு செய்தது. ஆய்வறிக்கையின் அடிப்படையில், தற்போது பொன்னேரி அரசு மருத்துவமனை, 88.82சதவீதம் தரமாக இருப்பதாக தெரிவித்து, தேசிய தரச்சான்று வழங்கி உள்ளது.
மேலும், கடந்த, ஜூலை மாதம் தேசிய சுகாதார இயக்ககம் சார்பில், மகப்பேறு பிரிவு மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சை குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதில், சிறப்பாக செயல்படுவதற்கான, தேசிய தர உறுதி சான்றும் அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு தரச்சான்று விருதுகளும், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு தமிழக சுகாதாரத் துறையின் வாயிலாக வழங்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து மருத்துவமனையின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் பி.கே.அசோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக மருத்துவப் பணிகளை மேற்கொண்ட மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதன்மை மருத்துவ அலுவலர் அசோகன்..,
இந்த சான்றுகள் முதல் முறையாக பொன்னேரி அரசு மருத்துவனைக்கு சான்றிதழ் கிடைத்துள்ளது எனவும், மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட கூட்டு முயற்சியால் சான்றிதழ் கிடைத்துள்ளதாக கூறினார்.
நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து காத்திருந்து சிகிச்சை பெற்று செல்லும் நேரத்தை குறைத்திருப்பதாக கூறினார். தாலுக்கா அளவிலான மருத்துவ மனையில் பல்வேறு வகையிலான அறுவை சிகிச்சைகளை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக செய்து வருகிறோம். லாப்ரோஸ்கோபி உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்காக இயந்திரங்கள் வாடகைக்கு கொண்டு வரப்பட்டு திறம்பட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து உபகரணங்களும் மருத்துவமனைக்கு சொந்தமாக வழங்கிட வேண்டும் என கேட்டு கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.