ஜி20 உச்சிமாநாட்டு அரங்கின் முகப்பில் வைப்பதற்காக சுவாமிமலையில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்ட நடராஜர் சிலை புதுடெல்லிக்கு இன்று கொண்டு செல்லப்பட்டுள்ளது.
புதுடெல்லி பிரகதி மைதானத்தில் அடுத்த மாதம் 7, 8, 9-ம் தேதிகளில் ஜி 20 உச்சிமாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டு அரங்கின் முன்பு, புதுடெல்லியில் உள்ள இந்தியன் நேஷனல் சென்டர் ஆஃப் ஆர்ட் சார்பில் நடராஜர் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 6 மாதத்திற்கு முன்பு கும்பகோணம் வட்டம், சுவாமி மலையில் உள்ள தேவ சேனாதிபதி சிற்பக் கூடத்தில் இந்தச் சிலை வடிவமைக்கும் பணி தொடங்கியது.
தற்போது 75 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் இன்று காலை, இந்திய நேஷனல் சென்டர் ஆஃப் ஆர்ட் செயலாளர் ஆர்ச்சல் பாண்டியா தலைமையில் வந்த குழுவினர், அந்த சிலையை பெற்றுக் கொண்டனர். அந்த சிலை முழுவதும் போர்த்தப்பட்டு லாரி மூலம் புது டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.இந்த சிலை வரும் 28ம் தேதி புது டெல்லி சென்றடைந்தவுடன், சிலையின் மீதமுள்ள 25 சதவீத பணிகளை மேற்கொள்ள இங்கிருந்து 15 ஸ்தபதியினர் செல்கின்றனர். இந்த சிலையை புது டெல்லி பிரகதி மைதானத்தில் அடுத்த மாதம் 7, 8, 9ம் தேதிகளில் நடைபெறும் ஜி 20 மாநாட்டு அரங்கு முன் வைப்பதற்காக கொண்டு செல்லப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜி20 உச்சிமாநாட்டு அரங்கில் பிரம்மாண்ட நடராஜர் சிலை..!
