• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

டெல்லி அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அதிரடி..!

Byவிஷா

Jul 26, 2023

டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியிருப்பது அம்மாநில அரசுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் டெல்லி அரசுக்கும், மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வந்தது. அதை தீர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சட்டப் போராட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், சட்டத்தை இயற்றும் அதிகாரம் டெல்லி சட்டப்பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.
இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட மாநில அரசின் நிர்வாக அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, டெல்லி அரசில் அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்றம் போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் மீண்டும் துணை ஆளுநருக்கு வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மாநில அரசின் அதிகாரங்களை நிலைநாட்டிய நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம், டெல்லி அரசுக்கு பேரிடியாக அமைந்தது. இந்தச் சூழலில், அவசரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில், இந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்த மசோதாவை எப்போது தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. டெல்லியில் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உண்டு என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியதையடுத்து, சில சட்ட திருத்தங்கள் மேற்கொண்டு, துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என மத்திய அரசு அவரச சட்டம் பிறப்பித்தது. இச்சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இதற்கான சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து அதிரடி காட்டியுள்ளது.