• Mon. Jan 20th, 2025

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அதிரடி மாற்றம்..!

Byவிஷா

Jul 26, 2023

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருப்பது, அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியில் மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து, திமுக மகளிரணியினர் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, மணிப்பூர் கலவரத்திற்கு எதிராக கண்டன குரல் எழுப்பி வந்தனர். அப்போது மாவட்ட கழக செயலாளர் சிவபத்மநாதன் கண்டன உரையாற்றினார். குறிப்பாக தென்காசியில் திமுகவில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சிவபத்மநாதன் தூண்டுதலின் பேரில் தன்னைப் பற்றி தவறாகவும், ஆபாசமாகவும், அசிங்கமாகவும் சமூகவலை தளங்களில் பதிவிட்டவர்களை தட்டிகேட்க துப்பில்லாத மாவட்ட செயலாளருக்கு மணிப்பூர் சம்பவம் பற்றி பேச என்ன அருகதை இருக்கின்றது. ஆகவே நீங்கள் மணிப்பூர் கலவரத்தை பற்றிப் பேசவேண்டாம் என மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி மேடையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இருதரப்பு ஆதரவாளர்களுக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் தமிழ்ச்செல்வி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இருதரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு சமூக வலைதளங்களிலும், செய்தி ஊடங்கங்களிலும் செய்தி பரவியது. மேலும் இச்சம்பவம் குறித்து மாவட்ட பஞ்சாயத்து தலைவி சென்னை சென்று திமுக தலைமையிடம் முறையிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் தலைமைக் கழகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வந்த சிவபத்மநாதனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்கு பதிலாக சுரண்டை நகரச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ஜெயபாலனை தென்காசி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.