• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நூற்றாண்டைத் தொட்டு நிற்கும் ‘கோலிசோடா’

Byவிஷா

Jul 7, 2023

எந்த மரமும் விதைத்தவுடன் வளர்ந்து விடாது. நான்கு தலைமுறை வியர்வைத் துளிகளை ஊற்றி, விடாமுயற்சியுடன் எழுந்து நின்று, நூற்றாண்டைத் தொடட்டு நிற்கிறது வேலூர் கோலிசோடா.
வேலூரிலும் அதைச் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் கண்ணன் அன்ட் கோ கோலி சோடா என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. வயிற்று வலி, வாயுக் கோளாறு இத்யாதி, இத்யாதி பிரச்னைகள் வந்தால், இந்த நிறுவனத்தின் கோலி சோடாவை உடைத்து பருகினால் போதும். நொடிப் பொழுதில் அஜீரணக் கோளாறுகள் பறந்துவிடும் என்பது மக்களின் கருத்து. அந்த அளவுக்குத் தன்னிகரில்லாத பாட்டி வைத்திய பானமாக இருக்கிறது இந்த கோலி சோடா.
தமிழ்நாட்டில் 1980-களில் குளிர்பானம் என்றதும்நினைவுக்கு வருவது கோலி சோடாதான். வீட்டுக்கு விருந்தினர் வந்ததும், பெட்டிக் கடை அல்லது பலசரக்கு கடைக்கு சென்று கோலி சோடா வாங்கித் தருவார்கள். அதன் பிறகு வெளிநாட்டு குளிர்பானங்கள் பிரபலமானது. குளிர்பானங்கள் எத்தனை வந்தாலும் கோலி சோடா மவுசு குறையவில்லை. தமிழ்நாட்டில் முதன் முதலில் வேலூரில் தான் கோலி சோடா தயாரானது. வேலூரில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க அந்த காலத்திலேயே பலவிதமான குளிர்பானங்களை பருகத் தொடங்கினர். வேலூரை சேர்ந்த கண்ணுசாமி முதலியார் கோலிசோடா தயாரித்து முதன் முதலில் விற்பனை செய்ய விரும்பினார். இதற்காக ஜெர்மனியில் இருந்து கோலி சோடா பாட்டில் இறக்குமதி செய்தார்.
1924-ம் ஆண்டு முதன் முதலில் கோலி சோடாவை அவர் தயாரித்தார். வேலூர் மாவட்டத்தில் சிறிய பெட்டி கடைகளுக்கு கோலி சோடா சப்ளை செய்யப்பட்டது. அந்த காலத்தில் சென்னை பெங்களூர் சாலையில் பயணம் செய்தவர்கள் வழியில் உள்ள கிராமங்களில் கோலி சோடா குடித்திருப்பதை மறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு கோலி சோடா வேலூரில் பிரபலமாக இருந்தது. முதன் முதலில் தயார் செய்யப்பட்ட கோலி சோடா பாட்டில் இன்றும் வேலூரில் உள்ள கண்ணன் சோடா கம்பனியில் அவரது தலைமுறையினர் பாதுகாப்பாக வைத்துள்ளனர். அதில் மேட் இன் ஜெர்மனி என எழுதப்பட்டுள்ளது. தற்போது பழம் புளூபெர்ரி கோலா எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பச்சை என பலவிதமான கோலி சோடாக்களை தயார் செய்து வருகின்றனர். இங்கிருந்து வட மாவட்டங்கள் முழுவதும் இவர்கள் கோலிசோடா விற்பனையை விரிவுபடுத்தி உள்ளனர். கண்ணுசாமி முதலியாரால் தொடங்கப்பட்ட கோலி சோடா 100-வது ஆண்டை எட்டி வருகிறது.
இதுகுறித்து சோடா கம்பெனி உரிமையாளர்கள் தெரிவித்ததாவது..,
கண்ணுசாமி முதலியார் சோடா கம்பனி தொடங்கிய போது உள்ளூரில் விற்பனை அதிகரித்தது. சுதந்திரத்திற்கு பிறகு கோலி சோடா விற்பனை மேலும் அதிகரித்தது. அந்தக் காலத்தில் ஜெர்மனியில் இருந்து பாட்டில்களை இறக்குமதி செய்தோம். தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து பாட்டில்கள் கொண்டு வந்து சோடா தயாரித்து வருகிறோம். 1990-ம் ஆண்டு முற்பகுதி வரை சோடா விற்பனை அதிகமாக இருந்தது. அதற்கு பிறகு வெளிநாட்டு குளிர்பானங்கள் வந்ததால் ஓரளவு விற்பனை குறைந்தது. 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது உள்ளூர் குளிர்பானங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என பொதுமக்களிடையே ஒரு பெரும் எழுச்சி ஏற்பட்டது. அதன் காரணமாக 2017-ம் ஆண்டுக்கு பிறகு கோலி சோடா விற்பனை புதிய உத்வேகத்தை ஏற்படுத்திவிட்டது என அவர்கள் கூறினர்.