• Sat. Oct 18th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

இன்று தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த நாள்

ByKalamegam Viswanathan

Apr 6, 2023

தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழறிஞர் வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 6, 1815).
மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஏப்ரல் 6, 1815ல் திருச்சிராப்பள்ளி அருகே உள்ள எண்ணெயூரில் பிறந்தார். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை, அன்னத்தாச்சி ஆகியோர் ஆவர். தமிழ்ப் புலவரான தனது தந்தையிடமே தமிழ் கற்றார். சென்னை சென்று சபாபதி முதலியார், அம்பலவாண தேசிகர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களிடம் கல்வி பயின்று புலமைப் பெற்றார். அற நூல்கள், காப்பியங்கள், சித்தாந்த சாத்திரங்கள், பேருரைகள், சிற்றிலக்கியங்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். இவர் அபார நினைவாற்றல் கொண்டவராகத் திகழ்ந்தார். பாடல்களைப் படித்த வேகத்தில் மனத்தில் பதிய வைத்துக்கொண்டுவிடுவார். சிறு வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தார்.

சிற்றிலக்கியக் காலம் என்று அழைக்கப்படும் காலத்தில் வாழ்ந்த இவர், திருத்தலங்களின் வரலாற்றை விவரித்து ஏராளமான தல புராணங்கள் பாடினார். 19ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றியவர். புராணங்கள், காப்பியங்கள், பிள்ளைத் தமிழ் நூல்கள், அந்தாதி, கலம்பகங்கள், கோவைகள், எண்ணற்ற தனிப் புராணங்களை இயற்றியுள்ளார். பிள்ளைத்தமிழ் நூல்களை அதிகமாகப் பாடியதால் ‘பிள்ளைத் தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ என்று புகழப்பட்டார். பெரியபுராணச் சொற்பொழிவு செய்வதில் வல்லவர். இவரது படைப்புகள் அனைத்துமே செய்யுள் வடிவில் அமைந்துள்ளன. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இவர் இயற்றியதாக அறிய முடிகின்றது. இதுவரை அச்சில் வெளிவந்த இவரது நூல்களின் எண்ணிக்கை 75 ஆகும். அறுபத்து ஐந்துகும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

மயிலாடுதுறையில் பலகாலம் தங்கியிருந்த இவரது புலமையை அறிந்து நாடிவந்த பல மாணவர்களுக்கு பொருள் எதிர்பாராமல் தமிழ் கற்பித்தார். பணம் பெற்றுக்கொண்டு பாடம் சொல்லிக் கொடுக்கும் பழக்கம் இவரிடம் இல்லை. தன்னிடம் கல்வி பயில வரும் ஏழை மாணவர்களைச் சொந்தப் பிள்ளைகளைப் போலக் கருதி உணவும் இடமும் அளித்துக் குருகுல முறையில் பாரபட்சமின்றிக் கல்வி புகட்டினார். கவிதைகள் பாடிச் சன்மானமாகப் பெற்ற செல்வத்தைக் கொண்டே இவர் தனக்கும் தன் மாணாக்கர்க்கும் செலவழித்தார். இவரிடம் பயின்ற மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் உ.வே.சாமிநாத ஐயர், குலாம் காதர், நாவலர், சவுரிராயலு நாயக்கர் ஆகியோர் ஆவர். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு ‘மகாவித்வான்’ என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார். சீர்காழியில் முன்சீபாகப் பணியாற்றிய தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். அவர் மீது வைத்திருந்த பெருமதிப்பின் காரணமாக, அவரைப் பாராட்டி ‘குளத்துக்கோவை’ என்னும் நூலை இயற்றினார்.

‘தாயைவிட என் மீது அதிக அன்பு கொண்டிருந்தவர் என் ஆசான்’ என்று உ.வே.சா. இவரைக் குறிப்பிட்டுள்ளார். இவரது படைப்புகள் 42ஐ ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு என்னும் பெயரால் இரு தொகுதிகளாக உ.வே.சா. வெளியிட்டுள்ளார். திரிசிபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாற்றை உ.வே.சா இரு பாகங்களாக விரிவாக எழுதி வெளியிட்டார். இந்நூலே இவரைப்பற்றி அறிந்து கொள்ள உறுதுணையாக உள்ளது. தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிப்ரவரி 1, 1876ல் தனது 75வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.