• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை
தணியுங்கள்: ஐ.நா. வேண்டுகோள்

எல்லையில் பதற்றத்தை தணிக்கும்படி இந்தியா – சீனாவுக்கு ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியா – சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி இந்திய – சீன படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மோதலில் தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இந்த மோதலுக்கு பின் இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வைத்துள்ளன. லடாக் மோதலுக்கு பின் சற்று தணிந்திருந்த எல்லை பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. அந்த வகையில் அருணாச்சலபிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யங்ட்சி பகுதியில் உண்மை கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த 9-ம் தேதி இந்திய-சீன படைகள் மோதிக்கொண்டன. இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், எல்லையில் பதற்றத்தை தணிக்கும்படி இந்தியா – சீனாவுக்கு ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரொஸ் செய்தித்தொடர்பாளர் ஸ்டெப்னி டுஜரிக் கூறுகையில், இந்தியா – சீன படைகள் மோதல் குறித்து அறிந்தோம். எல்லையில் பதற்றம் மேலும் அதிகரிக்காமல் பதற்றம் தணிய நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்‘ என்றார்.