ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் சுரேஷ். அகில பாரத ஐயப்பா சேவா சங்க உறுப்பினராக இருந்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர், அங்குள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் சுரேஷ் ஒற்றைக்காலால் நெல்லூரில் இருந்து இருமுடி கட்டுடன், கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி சபரிமலை புனித பயணத்தை தொடங்கினார். 105 நாட்கள் 750 கி.மீ. தூரத்தை கடந்து நேற்று முன்தினம் சுரேஷ் சபரிமலைக்கு வந்து சேர்ந்தார். அதைத்தொடர்ந்து அவர் 18-ம் படி ஏறி சாமி தரிசனம் செய்தார்.சபரிமலை புனித பயணம் குறித்து சுரேஷ் கூறுகையில், 2-வது முறையாக இப்போது நான் நடைபயணமாக சபரிமலை வந்து உள்ளேன்.
ஐயப்பனின் அருளால், நடந்து வரும் வழியில் எந்த தீங்கும் ஏற்பட வில்லை. உலக நன்மைக்காக வேண்டியும், கொரோனா கோரப்பிடியில் இருந்து மக்கள் விடுபட வேண்டியும் இந்த நடைபயணத்தை மேற்கொண்டேன். சபரிமலையில் மன நிறைவான தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தந்த போலீசாருக்கும், தேவஸ்தான ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.