மதுரை மாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில், தேசிய கொடியை ஏற்றிவைத்த ஆட்சியர் அனீஷ்சேகர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். மேலும் மூவர்ண பலூன்களை பறக்கவிட்ட ஆட்சியர் சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக புறாக்களையும் பறக்கவிட்டார்.
விழாவில் அரசு நலத்திட்ட உதவிகளாக 78 பயனாளிகளுக்கு ரூ.47,22,094/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். சிறப்பாக பணியாற்றி முதலமைச்சர் பதக்கம் பெறும் காவல் துறை அலுவலர்கள் 223 பேருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும்,மாவட்ட நிர்வாகம் சார்பாக வழங்கப்படும் பாராட்டுச் சான்றிதழ்களை 69 காவல் துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.
இதே போன்று சிறப்பாக பணியாற்றும் அரசு துறை அலுவலர்களுகள் 317 பேருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறப்பாக சமூக பணியாற்றி வரும் தன்னார்வலர்கள் 20 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களும் விழாவில் வழங்கப்பட்டது.
தென்மண்டல காவல்துறை தலைவர் பொன்னி, மாநகர காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா, காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர். கொரோனா கட்டுபாடு நடைமுறையில் உள்ள நிலையில் தியாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. குறைந்த அளவிலேயே பொதுமக்கள் பங்கேற்றனர்.