• Wed. Jan 22nd, 2025

சீமான் மீது குவியும் புகார்கள்… தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் பதிவு!

ByIyamadurai

Jan 11, 2025

பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் பதிவாகியுள்ளன.

நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகின. இதற்கு திராவிட கழகத்தினர் உள்பட பலவேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

இதைத் தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை தபெதிகவினர் நடத்தினர். புதுச்சேரி நெல்லித்தோப்பில் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற சீமானுக்கு எதிராக திராவிட இயக்க அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் பெரியார் பற்றிய தன்னுடைய பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், தன்னுடைய கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று சீமான் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக சட்டத்துறை இணை செயலாளர் மருதுகணேஷ் புகார் கொடுத்தார். இதேபோல, தமிழகம் முழுவதும் சீமானுக்கு எதிராக திக, திமுக, தபெதிகவினர் புகார் கொடுத்து வருகின்றனர்.

தற்போது வரையில் தமிழகம் முழுவதும் 70 வழக்குகள் சீமான் மீது பதிவாகியுள்ளன. இதன்படி சென்னை, கடலூர், கோவை, சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் தொடர்ந்து புகார்கள் குவிந்து
வருகிறது.