• Sat. Apr 20th, 2024

உக்ரைனில் இருந்து 6 விமானங்கள் இந்தியாவிற்கு புறப்பாடு…

Byகாயத்ரி

Mar 2, 2022

கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனில் இருந்து 6 விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளன என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்களை மீட்கும் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தில் தற்போது ஏர் இந்தியா உள்ளிட்ட தனியார் விமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடியின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்திய விமானப்படையும் மீட்பு பணியில் ஈடுபட உள்ளது. கடந்த ஆண்டில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய போது அங்கு சிக்கிய இந்தியர்களை மீட்பு வரும் பணியில் சி-17 விமானம் சிறப்பாக செயல்பட்டது.

இதனால் விமானப்படை களமிறங்குவதால் உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்கும் பணி மேலும் விரைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்திய மாணவர்களை அந்நாட்டு ராணுவப்படை அடித்து விரட்டுவதாகவும், வெளியேற விடாமல் தடுப்பதாகவும் சில வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு தரப்பு அதிகாரிகள், ‘மற்ற நாடுகளை விட இந்தியா, தனது குடிமக்களை குறிப்பாக மாணவர்களை மீட்பதில் 24 மணி நேரமும் ஓய்வின்றி செயல்படுகிறது.

சீனா போன்ற நாடுகள் மீட்பு பணிகளை ஒத்திவைத்துள்ளன. அவர்கள் பயண அறிவுறுத்தல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் வெளியிடவில்லை. சீன மக்களும் உக்ரைனில் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். அதே சமயம், இந்திய தேசியக் கொடி கட்டப்பட்ட பஸ்கள் உக்ரைனில் பாதுகாப்பான பயணிக்கின்றன. இந்திய தேசியக் கொடி வைத்திருப்பவர்கள் எந்த துன்புறுத்தலுக்கும் ஆளாவதில்லை,’ என்றனர். இந்நிலையில் இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்; கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனில் இருந்து 6 விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளன; மேலும் 1,377 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *