• Tue. Apr 23rd, 2024

500 ஆண்டு பழமையான நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

ByA.Tamilselvan

Nov 24, 2022

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே மோதகம் பகுதியில் 500 ஆண்டு பழமையான நடுகல் சிற்பம் கண்டறியப்பட்டது.
மோதகம் கரையாம்பட்டி சேர்ந்த பூசாரி முத்துசாமி என்பவர் தங்கள் ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாக கொடுத்த தகவலின்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் முனைவர் லட்சுமண மூர்த்தி, ஆய்வாளர் அனந்தகுமரன், தமிழ் செல்வம் ஆகியோர் திருமங்கலம் மோதகம் கரையாம்பட்டி பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது கிபி 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கற்சிற்பம் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன் கூறியதாவது


பாண்டியர் காலத்தில் செங்குடிநாட்டின் எல்லைக்குட்பட்ட மோதகம் வேளாண்மை,வணிகம் செய்வதில் சிறப்பு பெற்று விளங்கி இருந்தது .இவ்வூரில் பல வரலாற்றுத் தடயங்கள் புதைந்த நிலையில், மக்கள் வசிப்பிடம் இல்லாமல் அரசாங்க பதிவேட்டில் மட்டும் ஆவாரம்பட்டி, சுப்புலாபுரம், கரையாம்பட்டி,தாதமடம் போன்ற நான்கு கிராமத்திற்கு தாய் கிராமம் என்ற பெயரில் மோதகம் தற்போது இருக்கின்றன.

நடுகல் சிற்பம்

சங்ககால முதற்கொண்டு போரில் வீர மரணமடைந்த வீரனுக்கு நினைவாக நடுகல் நடப்பட்டு காவல் தெய்வமாக வழிபட்டு வருகிறது தமிழ் சமூகம். திருமங்கலம் ராஜபாளையம் பிரதான சாலையில் கரையாம்பட்டி விலக்குயின் வடக்கு திசையில் முட்புதரில் எழுத்துகள் கொண்ட நடுகல் கண்டறியப்பட்டது. மூன்று வரி கொண்ட எழுத்துக்கள் வாணன்,உட்பட்ட என்ற வரியைத் தவிர மற்ற எழுத்துக்கள் முற்றிலும் தேய்மானத்தோடு காணப்பட்டதால் பொருள் அறியமுடியவில்லை.


ஆண் மற்றும் பெண் சிற்பம்


நடுகல் நான்கு அடி உயரம் 2 அடி அகலம் கொண்டது. நடுகல்லில் ஒரு ஆண் , பெண் சிற்பம் வலது காலை மடித்து இடது காலை நீட்டி அமர்ந்த கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது.
இருவரும் விசிறி வடிவில் ஐந்து மடிப்பு தொங்கும் விரிப்பின் மீது அமர்ந்துள்ளார்.ஆண் காலில் அணிந்திருக்கும் கழல் அவனது வீரத்தை பறைசாற்றுகின்றது. அவனது காலை ஒட்டி வலது கையில் பிடித்துள்ள வாள் தரையை உரசிய வண்ணம் உள்ளது. இடுப்பிலிருந்து கழல் வரை இறுக்கமான ஆடை, இடுப்பில் கச்சையும் அணிந்துள்ளான். ஒட்டிய வயிற்றில் மடிப்பு, விரிந்த மார்பு, கழுத்தை ஒட்டி பதக்கம், நீண்ட காதை வளர்த்து காதணியும், இறுக்கமான முகத்தில் மீசை கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளது. தலையில் கொண்டை பகுதியில் சற்று சரிந்த நிலையில் கொண்டை அவிழ்ந்து விடாமல் இறுக்கிக் கட்டி முடிந்துள்ளது.

பெண் சிற்பம் ஆணின் வலது பக்கம் அமர்ந்து தன்னுடைய தலைக்கு இணையாக இடது பக்கத்தில் பெரிய கொண்டை அலங்காரத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.முகம் தேய்ந்த நிலையில் ஒட்டிய வயிறு ,இடுப்பில் பெரிய கச்சாடையும் ,பாதம் வரை ஆடையும் அணிந்துள்ளார். இச்சிற்பம் வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்க புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. கபோதத்துடன் கூடிய மூன்று நாசிக் கூடுகள் அழகான தோரணை வாயில் கொண்டு உள்ளது . சிற்பத்தின் எழுத்து வடிவம் மற்றும் உருவ அமைப்பை பொறுத்தமட்டில் கிபி 16ம் நூற்றாண்டு சேர்ந்த சிற்பம் என்று கருதலாம் . இச்சிற்பத்தை பார்க்கும்போது இப்பகுதியில் சிறப்பாக ஆட்சி செய்த குறுநில மன்னர் பரம்பரை சேர்ந்தவராக இருக்கலாம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *