• Sat. Apr 20th, 2024

கொளத்தூரில் 50 வீடுகள் இடிப்பு – பூர்வகுடிமக்களுக்கு நியாயம் வழங்க சசிகலா கோரிக்கை!

கொளத்தூரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்ததால் தங்கள் இருப்பிடத்தை இழந்து வீதியில் இருக்கும் பூர்வ குடி மக்களுக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும் என்று சசிகலா தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கொளத்தூரில் 50க்கு மேற்பட்ட வீடுகளை மேம்பாலம் மற்றும் பூங்கா கட்டுவதற்காக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், மாற்று இடமும் வழங்காமல், சென்னை மாநகராட்சியினர் இடித்து தள்ளியது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளான மேம்பாலம், பூங்கா போன்றவை தேவையானதுதான், அதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும் முன், அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

அப்படி எந்த ஒரு முன்னேற்பாடும் கொளத்தூர் அவ்வைநகரில் மேம்பாலம் கட்டுகின்ற திட்டத்தில் இருப்பதாக தெரியவில்லை. அதாவது, கொளத்தூர் அவ்வை நகரில் உள்ள வீடுகளில், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, சுமார் மூன்று தலைமுறையாக அங்கு மக்கள் குடியிருந்து வந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள்.


இதுநாள் வரை அரசாங்கத்திற்கு முறையாக வீட்டுவரி, தண்ணீர் வரி, மின்சாரம் பயன்பாட்டுக்கு கட்டணம் செலுத்தியும் வந்துள்ளார்கள். அதே போன்று குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட நாட்டில் ஒரு குடிமகனுக்கு தேவையான அனைத்தையும் தங்கள் வீட்டு முகவரியில் பெற்று பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும், அங்கு உள்ள மாணவர்கள், மாணவிகள் அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வந்துள்ளனர்,

இனி அதே பள்ளிகளில் தங்கள் படிப்பை எவ்வாறு அவர்கள் தொடரமுடியும் என்று செய்வதறியாது நிற்கின்றனர். அதே போன்று, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு படிக்கும் மாணவச்செல்வங்கள் படிப்பதற்குக் கூட இடம் இல்லாமல் தவிப்பதாக கூறுகின்றனர். மேலும், குடியிருப்புக்கு அருகாமையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு இதுநாள்வரை தங்கள் வாழ்க்கையை நடத்தியவர்கள் இனிமேல் எங்கு போய், என்ன தொழில் செய்வது என்று தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து விழி பிதுங்கி வீதியில் நிர்கதியாய் இருக்கிறார்கள் இதைப்பற்றியெல்லாம் எதையுமே யோசிக்காமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று தமிழக அரசு திடீரென்று அங்கு உள்ள வீடுகளையெல்லாம் இடித்து தள்ளி இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.

சென்னை கொளத்தூரில் உள்ள அவ்வைநகரும், தமிழகத்தை சேர்ந்த ஒரு பகுதித்தானே. ஏன் அங்கு குடியிருப்பவர்கள் என்ன பாவம் செய்தனர். அவசரகதியில் குடியிருப்புகளை இடிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது. அங்கு குடியிருப்பவர்களிடம் முதலில் அழைத்து பேசி, அவர்களுக்கு முறையாக மாற்று இடம் கொடுத்து,

அதனால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை சரிசெய்யும் வகையில், உரிய நிவாரண உதவிகளை செய்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியபின் வீடுகளை இடிப்பது, மேம்பாலம் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது.


மேலும் இந்த அரசாங்கத்தில், இது போன்ற மக்கள் பாதிக்கின்ற திட்டங்களில் யோசனை சொல்ல ஏன் எந்த அதிகாரியும் முன் வரவில்லையா? அல்லது அதிகாரிகளின் யோசனைகளை கேட்பதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கு நேரம் இல்லையா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை சாமானிய மக்கள் முன்வைக்கிறார்கள்.

மேலும், விரைவில் நகர்மன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்னர், அவசரமாக, அங்குள்ள மக்களை அப்புறப்படுத்துவதன் மூலம், அவர்களது அடிப்படை உரிமையான வாக்களிக்கின்ற உரிமையும் மறுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது. மேலும், மாநிலத்தின் முதல்வர் தொகுதியில் உள்ள மக்களுக்கே இந்த அவல நிலை என்றால், மற்ற தொகுதியில் உள்ள சாமானிய மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் கலக்கமடைந்து இருக்கிறார்கள்.

நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தில், இது போன்று மக்களை பாதிக்கின்ற வகையில் திட்டங்களை செயல்படுத்தாமல், மக்களுக்கு முறையாக மாற்று இடங்கள் வழங்கி, மறு குடியமர்வு செய்து, அதன் பிறகுதான் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போதுதான் “வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்” என்று புரட்சித்தலைவரின் பாடலுக்கு ஏற்ப, ஏழை எளிய மக்களுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த பேரறிஞர் அண்ணா , புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா போன்று, மக்களுக்கான ஒரு தலைவர் நமக்கு இனி யார் கிடைப்பார்கள் என்று எளிய மக்களின் ஏக்கம் இன்றைக்கு தெரிகிறது. எனவே, சென்னை கொளத்தூரில் உள்ள அவ்வைநகரில் தங்கள் இருப்பிடத்தை இழந்து வீதியில் நிற்கும் இந்த பூர்வகுடிமக்களுக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டு கொள்கிறேன்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *