வாடிப்பட்டி அருகே நியோ மேக்ஸ் நிதி நிறுவன அதிபரை காரில் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சிறுவதி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42). இவர் மதுரையில் ரியல் எஸ்டேட் நிதிநிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் மதுரையில் இருந்து நாமக்கல்லுக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, லிசி என்பவரிடம் கார்த்திகேயன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் என்றும், கார் வாடிப்பட்டி அருகே வந்தபோது கார்த்திகேயன் அலறல் சத்தத்துடன் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும், அவர் பயணம் செய்த
கார் வாடிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் கார் பார்க்கிங்கில் இருப்பதாகவும்,
அவரது தம்பி முத்துக்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் 5 மர்மநபர்கள் குடிபோதையில் பல்வேறு போலீஸ் செக் போஸ்ட்களை மோதி விட்டு வாடிப்பட்டி அருகே சாணார்பட்டி காவல் நிலைய பகுதியில் உள்ள ஒரு கிராம கரட்டு பகுதியில் நுழைந்தனர்.
இதனை அறிந்த கிராம மக்கள் காரை சுற்றிவளைத்த போது 4 பேரும் தப்பி ஓடினர். அதில் காரை ஓட்டி வந்த டிரைவர் பசுபதி என்பவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினார். அவரை கிராம மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் வாடிப்பட்டி அருகே பணியாளரை கடத்தி வந்து திண்டுக்கல்லில் இறக்கிவிட்டு அந்த வழியாக திரும்பிச் சென்றபோது சம்பவம் நடந்தது தெரியவந்தது,
அதனை தொடர்ந்து, வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் தரப்பட்டு போலீசார் பசுபதியை வாடிப்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை மேலும் 4 பேர் மலைப்பகுதியில் தப்பிக்க முடியாமல் மீண்டும் கிராமத்திற்குள் வரவே, பொதுமக்கள் அவர்களையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க, வாடிப்பட்டி போலீசார் அந்த நான்கு பேரையும் வாடிப்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் திருச்சியைச் சேர்ந்த பசுபதி, அதே பகுதியைச் சேர்ந்த நிதிநிறுவன விற்பனை மேலாளராக உள்ள தேவா என்பவருக்கு கார் ஓட்டுநராக பணிபுரிந்ததாகவும், அப்போது அவர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி நிதி நிறுவனத்தில் 2020 ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.அதற்கு மாதம் 4500ரூபாய் அவருக்கு வட்டி கிடைத்துள்ளது. பின்னர் 2022 ஆம் ஆண்டு மூன்று லட்ச ரூபாய் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தால் மூன்று ஆண்டுகளில் ஒன்பது லட்சம் கிடைக்கும் என தேவா கூறியதை நம்பி 3லட்ச ரூபாய் முதலீடு என மொத்தம் எட்டு லட்ச ரூபாய் ரொக்க பணத்தை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ஆனால் அந்நிறுவனம் முடங்கியதால் பசுபதிக்கு செலுத்திய பணம் கிடைக்காமல் போனது, இதனால் தேவாவை பலமுறை பசுபதி தொடர்பு கொண்டு பணம் கேட்டபோது, அவர் தான் அந்த நிறுவனத்தில் ஒரு ஊழியர் மட்டுமே நானும் நிறைய பணம் இழந்து உள்ளேன் எனக் கூறி கை விரித்து விட்டார். அதனை தொடர்ந்து பசுபதி தனது நண்பர்கள் சிலருடன் மதுரையில் உள்ள நிதிநிறுவன அலுவலகத்திற்கு வந்து அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான பாலா என்பவரிடம் பணத்தை கேட்கலாம் என முடிவு செய்து திருச்சியிலிருந்து கார் மூலம் மதுரை வந்துள்ளனர்.
அங்கு பாலா என்பவர் கிடைக்காத பட்சத்தில் கார்த்திகேயன் அங்கு வந்துள்ளார். கார்த்திகேயனை கடத்தி வந்தால் அவரிடமிருந்து பணத்தை பெற்று விடலாம் என தேவா கூறவே நாமக்கல் சென்ற கார்த்திகேயன் காரை பசுபதி கும்பல் பின் தொடர்ந்து வந்து வாடிப்பட்டி அருகே வழிமறித்து அவரை கடத்திச் சென்றுள்ளது.
பின்னர் பேரம் பேசி ஒரு தொகை கைமாறியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து திருச்சியில் இருந்து தேவா பசுபதியை திண்டுக்கல்லில் கீழே இறக்கிவிட்டு ஊருக்கு செல்லுமாறு கூறி அவர்களிடத்தில் மூன்று லட்ச ரூபாய் ரொக்க பணத்தை கொடுத்துள்ளார்.
அதனைப் பெற்றுக் கொண்ட பசுபதி கும்பல் தேவகோட்டை நோக்கி காரில் சென்ற போது போலீசார் வழிமறிக்கவே தாங்கள் கடத்தல் வழக்கில் தான் வழிமறிப்பதாக நினைத்து போலீசாரிடம் இருந்துதப்ப முயன்று இந்த வழக்கில் சிக்கி உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அதனை தொடர்ந்து வாடிப்பட்டி போலீசார் திருச்சியை சேர்ந்த பசுபதி வயது (29), முத்துக்குமார் வயது (31), கார்த்திக் வயது (30), வீரகணேசன் வயது (30), ஆனந்த் குமார் வயது (25) உள்ளிட்ட ஐந்து பேரையும் கைது செய்தனர்.
இதில் ஆனந்தகுமார், வீரகணேஷ் இருவரும் மலைப்பகுதியில் தப்பிக்க முயன்ற போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் இருவர் மட்டும் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மூவரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் மூன்று லட்ச ரூபாய் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.அதேபோல் இந்த கடத்தல் வழக்கு தொடர்பாக நிதி நிறுவன விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்த தேவா என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.