• Tue. Feb 18th, 2025

ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது

ByKalamegam Viswanathan

Dec 21, 2024

மதுரையில் இருந்து கேரளாவிற்கு கண்டெய்னர் லாரியில் 24,700 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற 9பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 4 பேர் கைது செய்தனர்.

மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் இனிக்கோ திவ்யன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை சரகம் காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில் இளந்திரையன் தலைமையில் மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி புறக்காவல் நிலையம் அருகில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு சம்மந்தமாக வாகன சோதனை நடைபெற்றது.

அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த TN 05 BK 7113 என்ற பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியை சோதனை செய்து பார்த்த போது அதில் தலா சுமார் 50 கிலோ எடை கொண்ட 494 சாக்குகளில் ரேசன் 24 ஆயிரத்தி 700 கிலோ ரேசன் புழுங்கல் அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கண்டெய்னர் லாரியுடன் வந்த காரை சோதனை செய்து பார்த்த போது அதில் நான்கு இலட்சம் ரூபாய் பணம் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ரேசன் அரிசியை மூட்டைகளில் அடைத்து கேரளாவிற்கு கடத்த முயன்றதாக அரிசி உரிமையாளரான மதுரை மேல அனுப்பானடி கதிர்வேல், கன்னியாகுமரி மாவட்டம் புல்லயான்விளை முருகதாஸ், பாறைசாலை பகுதியை சேர்ந்த சிஜி, ஜோஷ்வா, அஷின்ஷா, கேரள மாநிலம் எர்ணாகுளம் டான் வர்கிஸ்,
மதுரை பேச்சிக்குளம் பாலசுப்ரமணியன், லாரி ஓட்டுனரான பாண்டிச்சேரி மாநிலம் சூரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன், லாரி்கிளீனரான லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த குமார் ஆகிய 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் இந்த அரிசி கடத்தல் வழக்கில் அரிசி உரிமையாளரான முருகதாஸ், பாலசுப்பிரமணியன், லாரி ஓட்டுனர் மணிகண்டன், கிளீனர் குமார் ஆகிய 4பேரை கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது போன்று குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர் அதிரடி சோதனை நடைபெறும் எனவும் குற்றவாளிகள் மீது கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறை இயக்குனர் சீமா அகர்வால் மற்றும் காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் உணவுப்பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொதுமக்கள் 1800-599-5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு புகார் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.