• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மதுரை-கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் 360 டிகிரி சடக்- கவச் திட்டம் தொடக்கம்..,

ByKalamegam Viswanathan

Aug 25, 2026

மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக 360 டிகிரி சடக் கவச் (360 Degree Sadak Kavach)என்ற ஒரு ஆண்டு முழுவதும் சிறப்பு சாலை பாதுகாப்பு திட்டம் , கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டது.ஆண்டுதோறும் ஜனவரி மாதம் மட்டுமே சாலை பாதுகாப்பு குறித்து பேரணி மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வந்த நிலையில் ,
தற்போது ஓர் ஆண்டு முழுவதும், அதாவது நாள்தோறும் சாலை விபத்துக்களை தடுப்பதற்கும், மது போதையில் வாகன ஓட்டுபவர்களுக்கும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்ட மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள சாலை போக்குவரத்து அதிகாரி மற்றும் உதவி ஆட்சியர் ,தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ,பொது நல அமைப்புகளைச் சார்ந்தவர்களுடன் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

இங்கு நடைபெற்ற இத்திட்டத்தின் தொடக்க விழாவில் Cube Highways, Cube Highways Roots Foundation நிறுவனம் சார்பில் திட்ட CEO தீனா ஷெட்டி கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இது பயனர்களின் நடத்தையை மாற்றுவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் தரவு அடிப்படையிலான (Data Driven) அணுகுமுறையுடன் செயல்படுத்தப்படும் சாலை பாதுகாப்பு திட்டம்.

மதுரை – கன்னியாகுமரி சாலையில் விபத்து தரவுகளை விரிவாக ஆய்வு செய்து அதிக ஆபத்து உள்ள பகுதிகளை (High Risk Zones) கண்டறிந்துள்ளோம். விபத்துகளுக்கான காரணங்கள் என்ன, அதை எப்படி சரி செய்வது என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்படும்.

இது ஒரு முன்னோடி திட்டமாகும் (Pilot Program). Cube Highways Roots Foundation-ன் CSR திட்டமாகவும், IIFCL நிறுவனத்தின் ஆதரவுடனும் செயல்படுத்தப்படுகிறது.

குறிப்பாக இந்த சாலையில் நடக்கும் விபத்துகளில் 60 சதவீத விபத்துகள் இருசக்கர வாகனங்களால் நடக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகளின் நடத்தையை மேம்படுத்த விழிப்புணர்வு, கல்வி தேவை. அதுமட்டுமல்லாமல் பொறியியல், சட்ட அமலாக்கம் மற்றும் அவசர சிகிச்சை (Engineering, Enforcement, Emergency Care) ஆகியவற்றிலும் கவனம் செலுத்துவோம்.

இத்திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலையோரம் உள்ள பள்ளி, கல்லூரிகளுடன் இணைந்து மாணவர்களை தன்னார்வலர்களாக பயிற்சி அளிப்போம். மேலும் லாரி உரிமையாளர்கள் சங்கம், பேருந்து நிறுவனங்கள், தொழிற்சாலைகளுடன் இணைந்து ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

சாலை பாதுகாப்பு பிரச்சனை என்பது சாலை அமைப்பு நிறுவனத்தின் பிரச்சனை மட்டுமல்ல, காவல்துறையின் பிரச்சனை மட்டுமல்ல. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஏனெனில் இந்திய நெடுஞ்சாலைகளில் தினமும் 480 உயிர்கள் விபத்தில் பலியாகின்றன. ஒவ்வொரு உயிருக்கு பின்னாலும் ஒரு குடும்பம் உள்ளது. அந்த உயிர்களை காக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்றார்.