

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக காவடி எடுத்து வந்த எடப்பாடி பருவத ராஜகுல பக்தர்கள், 350 ஆண்டு பாரம்பரிய உரிமைப்படி நேற்று இரவு மலைக்கோயிலில் தங்கியும், 20 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரித்தும் வழிபாடு செய்தனர்!
வருடம்தோறும், தைப்பூசத் திருவிழா முடிவடைந்த பிறகு, பழநிக்கு வந்து சேரும் வகையில் தங்கள் பாதயாத்திரையை திட்டமிடுவார்கள் ராஜகுல சமூக பக்தர்கள்! இதனடிப்படையில், சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து பருவத ராஜகுல சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் புறப்படுவர். ராஜகுல சமூகத்தைச் சேர்ந்த பக்தர்களுக்கு, மலைக்கோயிலில் தங்கும் உரிமை உள்ளது. இது தொடர்பாக 350 ஆண்டுகளுக்கு முன்பு இச்சமூகத்தினருக்கு செப்பு பட்டயம் வழங்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது!


இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா கடந்த 12-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில், எடப்பாடியிலிருந்து காவடி எடுத்து புறப்பட்ட பருவத ராஜகுல சமூகத்தைச் சேர்ந்த பாதயாத்திரை குழுவினர் நேற்று பழநி வந்தடைந்தனர். சண்முகநதியில் நீராடிய பின்பு மலைக்கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்றனர்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக மலைக்கோயிலில் தங்குவோரின் எண்ணிக்கையை குறைக்க பக்தர்கள் குழுவினரிடம் கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து குறைவான பக்தர்களே நேற்று இரவு பழநி மலைக்கோயிலில் தங்கியிருந்தனர். இன்று காலை சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்ப உள்ளனர்.
இதனிடையே 20 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தத்தை இக்குழுவினர் நேற்று தயாரித்தனர். பாதயாத்திரையாக பழநி வந்த எடப்பாடி பக்தர்கள் இன்று ஊருக்கு திரும்பிச் செல்ல அரசு போக்குவரத்துக் கழகம் 25-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.