முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜிலியை கொலை செய்த கொலையாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (60). இவர் காவல் துறையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றிய இவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்ற இவர், திருநெல்வேலி முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் முத்தவல்லியாக இருந்தார். ரம்ஜான் நோன்பு இருந்த அவர் நேற்று (மார்ச் 18) அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு, தெற்கு மவுன்ட் சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, டூவீலரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.
இந்த தகவல் அறிந்த ஜாகீர் உசேனின் உறவினர்கள், நண்பர்கள், பல்வேறு அமைப்பு சேர்ந்தவர்கள் அங்கு திரட்டனர். இடப் பிரச்சினை காரணமாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளதாகவும், போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலையைத் தடுத்திருக்கலாம் என்றும் குற்றம் சுமத்தினர். ஜாகீர் உசேன் பிலிஜியின் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஜாகீர் உசைன் வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக, சில நாட்களுக்கு முன்பு ஜாகீர் உசைன் பேசிய காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர், திருநெல்வேலி நான்காவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனிடையே, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி நூருன்னிசா ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் இருவரும் வெளிமாவட்டத்திற்கு தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். அவர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.