வேலை வாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2014, 15 மற்றும் 16-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் சிறப்பு புதுப்பித்தல் சலுகை மூலம் மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி கணேசன் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள், நலவாரிய ஓட்டுநர்கள், விபத்து மரணத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1 லட்சம், ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைப்புசாரா ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இயற்கை மரண உதவித்தொகை ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தரப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை ரூ.2,400 ஆக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.