ஆஸ்திரேலியாவில் சுறு்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்நிலையில் 2வது டெஸ்ட் பகல் இரவு டெஸ்ட் ஆட்டமாக அடிலெய்டில் நேற்று தொடங்கியது.
இளஞ்சிவப்பு பந்தில் அடிலெய்டில் நடைபெறும் 6வது டெஸ்ட் இது. இங்கிலாந்து அணியில் மார்க் வுட், ஜாக் லீச் ஆகியோருக்கு பதிலாக ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஆஸி அணியில் கேப்டன் பேட் கம்மின்ஸ், ஹசல்வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட, ஜேய் ரிச்சர்ட்சன், அறிமுக வீரர் மைக்கேல் நெசேர் அணியில் இடம் பிடித்தனர்.டாஸ் வென்ற ஆஸி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் மார்கஸ் ஹர்ரிஸ், டேவிட் வார்னர் நிதானமாக விளையாடத் தொடங்கினர்.
ஆனாலும் 8வது ஓவரில் ஆஸி 7ரன் எடுத்திருந்த போது, ஸ்டூவர்ட் பந்து வீச்சில் மார்கஸ் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு இணை சேர்ந்த வார்னரும், மார்னஸ் லபுஷேனும் பொறுப்பாக விளையாடினர். தொடர்ந்து வார்னர் 32வது, மார்னஸ் 13வது அரை சதங்களை விளாசினர். தொடர்ந்து சதத்தை நெருங்கிய வார்னரை 95ரன்னில் ஸ்டோக்ஸ் வெளியேற்றினார். முதல் டெஸ்ட்டிலும் வார்னர் 94 ரன்னில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை பறி கொடுத்தார். அடுத்து இணை சேர்ந்த கேப்டன் ஸ்மித் நிதானமாக ஆட முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஆஸி 89ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 221ரன் எடுத்தது. மார்னஸ் 95, ஸ்மித் 18 ரன்னுடன் 2வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளனர்.