விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித்சிங் உத்தரவில் கடந்த வாரம் தேனி மாவட்டம் கூடலூரில் திறக்கப்பட்ட அரசு நேரடிநெல் கொள்முதல் நிலையத்தில் இதுவரை 280 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேனிமாவட்டத்தில் முல்லைப்பெரியாற்று தண்ணீர்மூலம் கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11ஆயிரத்து 807 ஏக்கர், தேனிவட்டத்தில் 2ஆயிரத்து 412 ஏக்கர், போடிவட்டத்தில் 488 ஏக்கர் என பதிவுபெற்ற 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல்விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் கம்பம் பள்ளத்தாக்கில், கூடலூர் தாமரைக்குளம், வெட்டுக்காடு, பாரவந்தான், பி.டி.ஆர். வட்டம், ஒழுகுவழி, மரப்பாலம், ஒட்டான்குளம், கம்பம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம், சாமாண்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடைப்பணிகள் நடைபெற்று வருகிறது.

நெல் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் கூடலூர் பகுதியில் அரசு நேரடிநெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கூடலூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கலெக்டர் ரஞ்சித்சிங் தேனி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
இந்த கொள்முதல் நிலையத்தில், சன்ன ரகம் நெல் அரசு மானியம் கிலோவுக்கு ரூ 1.07 பைசாவுடன் கிலோ ரூபாய் 24.50 என 40 கிலோ எடைகொண்ட மூடை ஒன்றுக்கு ரூபாய் 980 க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் இங்கு கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு, விவசாயிகளின் வங்கி கணக்கில் உடனடியாக பணம் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில் கூடலூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இந்த ஒருவாரத்தில் 280 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.