

தேனி மாவட்ட தமிழக எல்லை குமுளி அருகே உள்ள செங்கரை பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்பனை நடைபெறுவதாக பீருமேடு எக்சசைஸ் வட்டார அலுவலக உதவி எக்சசைஸ் ஆய்வாளர் ஜி.ஜி. கே கோபால்-க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை அடுத்து அவரது தலைமையில் போலீஸார்கள் தீபகுமார் பி.எஸ், முகேஷ், பெண் சிவில் எக்சசைஸ் அதிகாரி ஸ்ரீதேவி மற்றும் ஜேமஸ் ஆகியோர் செங்கரை பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில், அரசு அனுமதி இல்லாமல் இந்தியாவில் தயாராகும் அயல்நாட்டு மதுபான வகைகள் (ஐஎம் எஃப்எல்) சில்லறை விற்பனை செய்து கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த முனியாண்டி மகன் யேசுதாஸ் (45) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 2 லிட்டர் மதுபானம், மற்றும் 7000 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

அவர் மீது மதுவிலக்கு சட்டப்பிரிவுகள் 55(a), 55(i) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார்கள், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக, குற்றம் சாட்டப்பட்டவரையும், வழக்கு ஆவணங்களையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் வண்டிப்பெரியார் எக்சசைஸ் ரேஞ்ச் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

