ஆடி கிருத்திகை விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில் வரும் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 5 நாட்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா வருகிற 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு, கோவிலில் நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது; “திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை, தெப்பத்திருவிழா நடைபெற உள்ள நாட்களில் 24 மணி நேரமும் அறநிலையத்துறை சார்பாக அன்னதானம் வழங்கப்படும். மேலும், பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி
ஆகியவை செய்து தரப்படும்.அதேபோல், நீண்ட காலமாக நிலுவையில் இருக்கின்ற ராஜ கோபுரத்தை இணைக்கின்ற படிக்கட்டுகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளோம்.புதிதாக அமைக்கப்படுகின்ற வெள்ளி தேர் பணிகளையும் தற்போது ஆய்வு செய்துள்ளோம். கோவிலுக்கு மாற்றுப்பாதை வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் உடன் ஆலோசிக்கப்பட்டது.மேலும், பக்தர்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்தும் கூட்டத்தில் முடிவு எடுத்திருக்கின்றோம். 3 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.இந்த விழாவின்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பிரகாரத்தை சுற்றி வரும் பக்தர்கள் மீது தண்ணீர் தெளிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கான எண் விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.