கராச்சி, பாகிஸ்தான்: கராச்சியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, மாலிர் மாவட்ட சிறையில் இருந்து 216 கைதிகள் தப்பியோடியுள்ளனர். தப்பியோடியவர்களில் 80 பேர் மீண்டும் பிடிபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று அதிகாலை, ரிக்டர் அளவுகோலில் குறைந்த அளவே பதிவான (தீவிரம் குறைந்த) நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிறைக்குள் இருந்த சுமார் 600 கைதிகள் பாதுகாப்பு கருதி திறந்தவெளி மைதானத்திற்கு மாற்றப்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட கைதிகள், பாதுகாப்பு அதிகாரிகளின் துப்பாக்கிகளைப் பறித்து, அவர்களை மிரட்டி முக்கிய நுழைவாயிலைத் திறக்க வைத்து வெளியேறி தப்பித்துள்ளனர்.
இந்த மோதலில் ஒரு கைதி கொல்லப்பட்டதாகவும், மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது, சிறையில் சுமார் 6000 கைதிகள் இருந்த நிலையில், பாதுகாப்புக்கு 28 காவலர்கள் மட்டுமே இருந்துள்ளனர். தப்பியோடிய கைதிகள் நகரத்திற்குள் ஓடுவதை பார்த்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் 11 லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.