கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் மறு உத்தரவு வரும் வரை பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தற்போது அந்தத் தேர்தல் செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருப்பது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலை ஒத்தி வைத்து நடிகர் சங்க பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தேர்தலை நடத்த அனுமதித்து, மறு உத்தரவு வரும் வரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதேபோல் தமிழக அரசு சார்பில் நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி சார்பில் வழக்கு தொடுத்தனர். இதனை தொடர்ந்து நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்ய கோரி நடிகர் ஏழுமலை மற்றும் பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த தனி நீதிபதி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் 3 மாதத்துக்குள் வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இத்தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்படுகிறார் என்றும் மறுதேர்தல் நடத்தி முடிக்கும் வரை நடிகர் சங்க நிர்வாகத்தை அரசு நியமித்த சிறப்பு அதிகாரி நிர்வகிப்பார் என்றும் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து விஷால், நாசர், கார்த்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளின் விசாரணை முடிந்துள்ள நிலையில் நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற நடிகர் தேர்தல் செல்லும். நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தல் தேவையில்லை என உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் நடிகர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தல் செல்லாது என தனி நீதிபதி கல்யாண சுந்தரம் வழங்கிய தீர்ப்பையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர். மேலும் ஏற்கனவே பதிவான வாக்குகளை 4 வாரத்தில் எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.