• Tue. Apr 23rd, 2024

சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 18,000 காவலர்கள் குவிப்பு…

Byமதி

Oct 30, 2021

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், சென்னை பெருநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 18,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருகிற 04.11.2021 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் அதிகளவு கூடுவதால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சென்னையில் அதிகளவு கூடும் இடங்களான தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முதல் 04.11.2021 அன்று இரவு வரை சென்னை பெருநகர காவல்துறை சார்பில், கீழ்க்காணும் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்புக்காக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், குற்ற தடுப்பு முறைகள், கொரோனா தொற்று பரவாமல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆகிய 3 முக்கிய நடைமுறைகள் கடைபிடித்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேற்கூறிய அனைத்து இடங்களிலும் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் என சுமார் 18,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கொண்டு, மேற்கூறிய 3 பாதுகாப்பு அம்சங்களுடன் கூடுதல் கவனங்களுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, காவல் ஆளிநர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, நேரடியாகவும், பைனாகுலர் மூலமும் கண்காணித்து, குற்றச் செயல்கள் நடவாமல் தடுத்து வருதல், மேலும், காவல் ஆளிநர்கள் ஒலி பெருக்கிகள் மூலம் செல்போன், பணம், தங்க நகைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது

காவல்துறை நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் அடிக்கடி ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, முக்கிய சந்திப்புகளில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து, குற்றவாளிகள் நடமாட்டம் கண்காணித்தும் வருகின்றனர்.

வாகனங்கள் செல்ல இயலாத இடங்களிலும், கூட்ட நெரிசலான இடங்களிலும் டிரோன் கேமிராக்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ குழுவினர்கள் அடங்கிய 108 ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பொதுமக்கள் கூடும் இடங்களிலும், வணிக வளாகங்களிலும், சமீபத்தில் சென்னை பெருநகர காவல்துறைக்கு வழங்கப்பட்ட நடமாடும் உடைமைகள் சோதனை கருவி வாகனத்தின் (Mobile X-ray Baggage scanner vehicle) மூலம் சுழற்சி முறையில் சென்று பொதுமக்கள் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

பட்டாசு கடைகளின் அருகில் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணித்து வருகின்றனர்.
பொருட்கள் வாங்க வரும் பெண்களின் கழுத்திலுள்ள தங்க நகைகளை திருடப்படாமல் தடுக்க கழுத்தில் துணிகளை சுற்றி கவசமாக (Scarf) கட்டிக் கொள்ள வலியுறுத்தப்பட்டு, துணி கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

காவல் ஆளிநர்களின் சீருடையில் கேமராக்கள் (Body worn Camera) பொருத்தப்பட்டு, குற்றவாளிகள் நடமாட்டம் மற்றும் குற்றச் செயல்கள் நடவாமல் தடுத்து வருகின்றனர்.

Face Recognition Camera-க்கள் (FRS) பொருத்திய சுமார் 1,200 காவல் உதவி ஆய்வாளர்கள் FRS காவல் குழுக்களாக பிரித்து கண்காணித்தும், வாட்சப் குழு தொடங்கி முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன் பரிமாற்றம் செய்து, குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக, சென்னையில் 6 இடங்களில் சிறப்பு பேருந்து முனையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இலவசமாக முகக்கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 24.10.2021 முதல் 04.11.2021 வரையில், சென்னை பெருநகரில் ஒரு நம்பர் லாட்டரி மற்றும் சூதாட்டங்கள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு பணம் தீய வழியில் விரயமாவதை தடுக்க சிறப்பு அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்பேரில், ஒரு நம்பர் லாட்டரி விற்றது தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 101 நபர்கள் கைது செய்யப்பட்டு, பணம் ரூ.1,06,160/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 84 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பெருநகர காவல்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியினர் இணைந்து கடந்த 23.10.2021 முதல் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் முக்கிய ஆயுதமான முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக சிறப்பு அதிரடி வேட்டை மேற்கொண்டு, 49,326 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.98,65,200/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *