
விருதுநகர் அருகேயுள்ள ஒண்டிப்புலி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் அதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலையொன்றில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு ரமேஷ், தனது குடும்பத்தினருடன் வீட்டின் மாடியில் படுத்து தூங்கினார். இன்று காலை ரமேஷ் மாடியிலிருந்து கீழே வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 17 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணம் 5 லட்சம் ரூபாய் திருடு போயிருப்பதைப் பார்த்து ரமேஷ் மேலும் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர், சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், ரமேஷின் வீட்டிற்குச் சென்று தடயங்களை சேகரித்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
