• Wed. Mar 26th, 2025

ஆடுகளை வெறி நாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் உயிரிழப்பு

ByAnandakumar

Feb 28, 2025

கரூர் அருகே தோட்டத்து பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை வெறி நாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் உயிரிழப்பு, 5 க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நிலையில், 20 ஆடுகள் காயம் ஏற்பட்டுள்ளது. வெறிநாய்களை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரூர் மாவட்டம் பரமத்தியை அடுத்த நெடுங்கூர் பனம்பாளையம் கிராமத்தில் பரமசிவம் என்ற 60 வயது முதியவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மேய்ச்சலுக்குப் பிறகு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு தூங்கச் சென்று விட்டார். இன்று காலை ஆடுகளை பட்டியிலிருந்து திறந்து விடுவதற்காக சென்று பார்த்த போது பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 55 ஆடுகளில் 15 ஆடுகள் உயிரிழந்த நிலையிலும், 5 ஆடுகள் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. மேலும், 25 ஆடுகள் கை, கால்களில் காயங்களுடன் கிடந்துள்ளன. இதனை பார்த்த பரமசிவம், அருகில் உள்ள க.பரமத்தி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து கால்நடை துறை அதிகாரிகள், மருத்துவர்கள் காயம்பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு சுமார் 1,50,000 ரூபாய் இருக்கும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். க.பரமத்தி சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து வெறி நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், இரவு நேரங்களில் பட்டியில் அடைக்கப்படும் ஆடுகளை கடந்த 2 மாதங்களில் இது 3வது சம்பவம் என்றும் வெறி நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.