• Thu. Apr 24th, 2025

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள்

ByPrabhu Sekar

Feb 21, 2025

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட, ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், இலங்கையிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம், சென்னை வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில், சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாட்டின்ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதி மாலையில், 2 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

மறுநாள் 26 ஆம் தேதி அதிகாலை பாம்பன் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து, 6 நாட்டிகல் தொலைவில் கடலில், மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென இலங்கை கடலோர காவல் படை கப்பல் வந்து, ராமேஸ்வரம் மீனவர்களின் 2 விசைப்படகுகளையும், மடக்கிப் பிடித்தனர். அதோடு மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி, 2 விசைப்படகுகளையும், பறிமுதல் செய்தனர். அதோடு 15 மீனவர்களையும் கைது செய்து, இலங்கைக்கு கொண்டு சென்றனர். அங்கு இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, 15 மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மீனவர்களின் குடும்பத்தினர், மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரி, கோரிக்கைகள் விடுத்தனர்.

இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அவசர கடிதங்கள் எழுதினார். இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை, உடனே விடுவிக்க ஒன்றிய அரசு, இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இதற்கிடையே இலங்கை நீதிமன்றம், ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரையும், விடுதலை செய்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இடம் ஒப்படைத்தனர்.

இதை அடுத்து தூதரக அதிகாரிகள், ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரையும், விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தனர். மீனவர்களுக்கு பாஸ்போர்ட்கள் இல்லாததால், இந்திய தூதரக அதிகாரிகள் அனைவருக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் வழங்கினர். அதோடு 15 மீனவர்களுக்கும், விமான டிக்கெட்டுகள் ஏற்பாடுகளையும், இந்திய தூதரகம் செய்தது.

இந்த நிலையில் நேற்று இரவு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து, சென்னைக்கு வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், 15 மீனவர்களும், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில், மீனவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின்பு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம், சொந்த ஊரான ராமேஸ்வரம் தங்கச்சி மடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.