கோவையில் ஓட்டு வீட்டில் வசித்து வரும் தனியார் நிறுவன காவலாளிக்கு, மாநகராட்சி மூலம் ரூ.1.60 லட்சம் வணிக வரி விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிரோன் சர்வே மூலம் கூடுதலாக 4 ஆயிரம் சதுர அடிக்கு வரி விதிக்கப்பட்ட நிலையில், வடிவேல் பாணியில் மாயமான இடத்தை மீட்டு கொடுத்து விட்டு வரியை வாங்கிக் கொள்ளுமாறு காவலாளி தெர்வித்து உள்ளார்.
கோவை மாநகராட்சியில் வணிக வரியை, அவுட் சோர்சிங் முறையில் டிரோன் சர்வே மூலம் அளவீடு செய்து வரி நிர்ணயம் செய்யும் நடைமுறையை செயல்படுத்தி உள்ளது. இதன் இடையே மாநகராட்சியின் டிரோன் சர்வே முறையை கைவிட கோரி பல்வேறு கட்சியினர் மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி மனு அளித்தனர். இந்நிலையில் கோவை மாநகராட்சியின் டிரோன் சர்வே முறையால் அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.
கோவை 100 அடி சாலை, 8 வது வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி ( 75). இவர் தனது மனைவி பொன்னாம்மாளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். மேலும் பழனிச்சாமி காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 1935-ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தனது தாத்தா வங்கிய 1,100 சதுர அடி பரப்பிளவிலான வீட்டில் வசித்து வரும் பழனிச்சாமி தனது வீட்டின் முன் பகுதியை உணவகத்தை வாடகை விட்டு உள்ளார். இதற்காக மாநகராட்சிக்கு வணிக வரியையும் செலுத்தி வருகிறார். 6 மாததிற்கு ஒரு முறை செலுத்தி வரும் நிலையில் கடந்த 2023-24 -ல் ரூ.2,182 வரியை செலுத்தினார். இந்நிலையில் கடந்த செப் மாதம் மாநகராட்சி அதிகாரிகள் தனியார் மூலம் டிரோன் மூலம் சர்வே எடுத்துச் சென்றனர். மேலும் நிலுவையில் உள்ள வரியை செலுத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதனால் ரூ.3 ஆயிரத்துடன் பழனிச்சாமி வரி செலுத்த மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குச் சென்ற போது மாநகராட்சியில் வணிக வரி 6 சதவீதமாக உயர்ந்து உள்ளதாக தெரிவித்தனர். இருப்பினும் அதை கட்டுவதாக பழனிச்சாமி கூறிய நிலையில், கட்ட வேண்டிய தொகை ரூ.1.60 லட்சம் எனக் கூறிய போது அதிர்ச்சி அடைந்து உள்ளார். இது குறித்து விளக்கம் கேட்ட போது அவரது மொத்த இடம் 5,177 சதுர அடி எனவும், தவணை தொகை ரூ.52,732 எனவும் தெரிவித்து உள்ளனர். இதை அடுத்து பழனிச்சாமி தனக்கு அவ்வளவு இடம் இல்லை எனவும், தவறாக சர்வே செய்யப்பட்டதாக கூறினார். இதை அடுத்து மனுவாக எழுதி பெட்டியில் போடுமாறு அதிகாரிகள் கூறி உள்ளனர். ஆனால் இது வரை நேரில் வந்து அதனை பார்க்கவில்லை எனவும்,. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பேசிய பழனிச்சாமி கூறும் போது :
எனது தாந்தை பெயரில் வீடு உள்ளது. எனது குழந்தைகளுக்கு திருமணம் முடித்து தனியாக சென்று விட்டனர். நானும் எனது மனைவியும் தனியாக வசித்து வருகிறோம்,. எனது வீட்டிற்கு இதுவரை ரூ.2,182 வரி செலுத்தி வந்தேன். கடந்த செப் மாதம் டிரோன் அளவீடு செய்து ரூ.52 ஆயிரம் வரி செலுத்த வேண்டும் என எழுதி கொடுத்தனர். இது குறித்து மாநகராட்சி மத்திய மணடலம் அலுவலகம் சென்று விசாரித்தேன். அப்போது மனுவாக எழுதி பெட்டியில் பொட அறிவுறுத்தினர். இதுவரை எந்த பதிலும் எனக்கு வரவில்லை. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதில் ரூ.1.60 லட்சம் வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 1,100 சதுர அடி மட்டும் இடம் உள்ள நிலையில் 5170 சதுர அடிக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது. எனக்கு வர வேண்டும் மீதம் உள்ள 4 ஆயிரம் அடி இடத்தை கொடுத்தால் அந்த வரியை நான் உடனே கட்டி விடுகிறேன் என தெரிவித்தார்.