• Fri. Mar 29th, 2024

காந்தி மியூசித்தை புதுப்பிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு… ஸ்டாலின் அதிரடி!..

By

Aug 15, 2021

மதுரை காந்தி மியூசியத்தை நவீன முறையில் புதுப்பிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவித்துள்ளார்.

அகிம்சையின் வலிமையை உலகிற்கு போதித்த மகாத்மா காந்தியின் நினைவாக இன்றைக்கும் மிக கம்பீரமாக எழுந்து நிற்கிறது காந்தி நினைவு அருங்காட்சியகம். கடந்த 1959ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் நாள் அன்றைய இந்திய பிரதமர் ஜவகர்லால் நேருவால் காந்திக்கென்று நினைவு அருங்காட்சியகம் இந்தியாவிலேயே முதல்முறையாக தொடங்கி வைக்கப்பட்டது. மதுரையை ஆண்ட விஜயநகர பேரரசின் பெண் அரசியான ராணி மங்கம்மாளின் கோடைகால ஓய்வெடுக்கும் அரண்மனையாக திகந்த கட்டிடம்தான் பின்னாளில் காந்தி நினைவு அருங்காட்சியகமாக மாற்றம் கண்டது.

இந்தியாவின் 75வது சுதந்திர முன்னிட்டு சென்னை கோட்டையில் முதன் முறையாக கொடியேற்றிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அதனைத் தொடர்ந்து சுதந்திர உரையாற்றினார்: அதில், மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் புனரமைப்பு பணிகளுக்காக 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்புச் செய்துள்ளார். இந்த அறிவிப்பு காந்தியவாதிகளிடையே பெரும் மகிழ்ச்சியை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் ஊழியர்கள் ஏறக்குறைய இருபத்தைந்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் அரசின் மானிய தொகையை பொருத்தே இவர்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு இங்கு பணியாற்றும் ஊழியர்களின் நிரந்தர ஊதியத்திற்கு வழி செய்யும் வகையில் குறிப்பிட்ட தொகையை வைப்பு நிதியாக தமிழக அரசு காந்தி நினைவு அருங்காட்சியகம் பெயரில் உருவாக்கித் தர வேண்டும் எனவும் காந்திய ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் இயக்குநர் நந்தாராவ் கூறுகையில், காந்தியின் நினைவாக இந்தியாவில் தற்போது அமைந்துள்ள ஏழு அருங்காட்சியகங்களில் முதலாவது அருங்காட்சியகம் தான் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம். அதேபோன்று தென்னிந்தியாவிலேயே இந்த ஒரு அருங்காட்சியகம் தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அருங்காட்சியகத்தில் முதல் பிரிவில் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாறும், இரண்டாவது பிரிவில் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறும், மூன்றாவது பிரிவில் அண்ணல் காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பிரிவில் தான் காந்தியடிகள் நேரடியாக பயன்படுத்திய 14 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அவர் சுடப்பட்டு இறந்த அந்த இறுதி நாளின் போது அணிந்திருந்த வேட்டி ரத்தக்கறையுடன் இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவரது கைப்பட எழுதிய கடிதங்கள் இங்கே உள்ளன. நான்காவது பிரிவில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த புகைப்படங்கள் எல்லாம் இடம் பெற்று உள்ளன. காந்தி மதுரையில் அரையாடை துறந்ததின் 100ஆம் ஆண்டு விழாவும், இந்திய சுதந்திர தினத்தின் 75ஆம் ஆண்டு விழாவும் தற்போது கொண்டாடப்படும் நேரத்தில் தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சார்பாக எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனக்குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *