• Sat. Apr 20th, 2024

கன்னியாகுமரி – மும்பை ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலை கொங்கன் வழிதடத்தை மாற்றி இயக்க கோரிக்கை…

Byadmin

Aug 4, 2021

கன்னியாகுமரியிலிருந்து  திருவனந்தபுரம், கோட்டயம்,  எர்ணாகுளம், பாலக்காடு, சேலம், ஜோலார்பேட்டை, கடப்பா வழியாக மும்பைக்கு 2133 கி.மீ தூரம் கொண்ட ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்தான் கன்னியாகுமரிக்கு இயக்கப்பட்ட முதல் எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் ஆகும். இந்த ரயில் அறிவிக்கப்படும் போது மதுரை மார்க்கமாக மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்த காரணத்தால் எர்ணாகுளத்தில் இருந்து இயக்கப்பட்ட இந்த ரயில் கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.  இந்த ஜெயந்தி ஜனதா ரயில் கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு மும்பை செல்வதற்கு 2133 கி.மீ பயணம் செய்து மும்பை செல்ல சுமார் 44 மணி நேரம் ஆகிறது. இவ்வாறு அதிக தூரம் பயணிப்பதால் குமரி மாவட்ட பயணிகள் இந்த தூரத்துக்கான அதிக கட்டணத்தை செலுத்தி பயணம் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் மங்களுர், கோவா வழியாக கொங்கன் வழித்தடத்தில் மும்பைக்கு சுமார் 1600 கி.மீ தூரம் பயணம் செய்து 30 மணி நேரத்தில் சென்று விடலாம். இந்த காரணத்தால் இந்த ரயிலில் கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் மும்பைக்கு ஒரு பயணி கூட பயணம் செய்வது கிடையாது. குமரி மாவட்டத்தில் இருந்து மும்பை செல்லும் பயணிகள் திருவனந்தபுரத்திலிருந்து செல்லும் நேத்திராவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் மும்பைக்கு தற்போது பயணம் செய்கின்றனர்.

           தற்போது நாகர்கோவிலிருந்து மதுரை, காட்பாடி வழியாக மும்பைக்கு வாரத்துக்கு நான்கு நாட்கள் ரயிலும், நாகர்கோவிலிருந்து மதுரை, செங்கல்பட்டு வழியாக வாரத்துக்கு இரண்டு நாள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர நாகர்கோவிலிருந்து கொங்கள் வழித்தடத்தில் நாகர்கோவில் – காந்திதாம் வாராந்திர ரயிலும், திருநெல்வேலி – ஜாம்நகர்  வாரத்துக்கு இரண்டு நாள் ரயிலும் , திருநெல்வேலி – காந்திதாம் வாராந்திர இயக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவிலிருந்து மும்பை செல்லும் ஜாம்நகர் ரயிலுக்கும் சுற்றி செல்லும் ஜெயந்திஜனதா ரயிலுக்கும் 17 மணி நேரம் பயணநேரம் வித்தியாசம் உள்ளது. கன்னியாகுமரியிலிருந்து கொங்கன் வழிதடத்தில் தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.  

நேத்திராவதி எக்ஸ்பிரஸ் ரயில்:

         கொச்சி மற்றும் மங்களுரிலிருந்து சேலம் வழியாக மும்பைக்கு இயக்கப்பட்டு வந்த நேத்திராவதி எக்ஸ்பிரஸ் ரயில் கேரளாவை சார்ந்த எம்.பிகளின் முயற்சியால் 1998 –ம் ஆண்டு அதன் வழித்தடத்தை மாற்றி மங்களுர், கோவா வழியாக அதாவது கொங்கன் வழிப்பாதையாக மாற்றி இயக்கப்பட்டு திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் 1998 –ம் ஆண்டு மே மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில்தான்  நாகர்கோவில் – காந்திதாம் வாராந்திர ரயில் கொங்கன் வழித்தடத்தில் மாற்றி விடப்பட்டது. இந்த கால கட்டத்தில் குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் இங்கிருந்து இயக்கப்பட்ட கன்னியாகுமரி – மும்பை ஜெயந்திஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலை கொங்கன் வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து ரயில்வேத்துறைக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் இந்த ரயில் எளிதாக மங்களுர், கோவா வழியாக கொங்கன்வழித்தடத்தில் மாற்றப்பட்டிருக்கும். இவ்வாறு மாற்றப்பட்டிருந்தால் குமரி மாவட்ட பயணிகள் 30 மணி நேரத்தில் கோவா வழியாக மும்பைக்கு பயணம் செய்துவிடலாம். ஆனால் ரயில்வேத்துறையில் பணிபுரிந்த கேரளாவை சார்ந்த அதிகாரிகள் கேரளா பயணிகளுக்கு வேண்டி நேத்திராவதி எக்ஸ்பிரஸ் ரயிலை கொங்கன் வழித்தடத்தில் மாற்றி இயக்கி விட்டு நமது ரயிலை எந்த மாற்றமும் செய்யாமல் பழைய வழித்தடத்திலே சுற்றி செல்லுமாறு இயக்கினார்கள்.

       கடந்த பல ஆண்டுகளாகவே திருவனந்தபுரம் – லோகமான்யதிலக் நேத்திராவதி எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த கோரிக்கைக்கு ரயில்வேதுறை செவிசாய்க்கவில்லை.       கொங்கன் பாதையில் தற்போது இயக்கப்பட்டு வரும் சுமார் 20க்கு மேற்பட்ட ரயில்கள் எல்லாம் கொச்சுவேலி மற்றும் திருவனந்தபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. ஒரே ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரிக்கு எந்த ஒரு ரயிலையும் இயக்க ரயில்வே அதிகாரிகள் முன்வரவில்லை. ஏனென்றால் கன்னியாகுமரி ஒரே கோட்டத்துக்கு உட்ப்ட்டு இருந்தாலும் தமிழ்நாட்டில் அமைந்துள்ள காரணத்தால் எந்த ஒரு கொங்கன்பாதை ரயிலையும் இயக்க ரயில்வே அதிகாரிகள் முன்வரவில்லை. கொங்கன் பாதை துவங்கப்பட்டு 23 வருடங்கள் ஆகியும் கன்னியாகுமரியிலிருந்து இதுவரை ஓரு தினசரி ரயில் கூட கொங்கன்பாதையில் இயக்கப்படவில்லை.

500 கி.மீக்கு மேல் பயணசீட்டு:

ரயில் நிலையத்தில் ஓர் ரயிலுக்கு நிறுத்தம் கோரினால் தற்போது இயங்கி வரும் ரயில்களில் சராசரியாக 500 கி.மீக்கு மேல் விற்பனையாகும் பயணசீட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே புதிய ரயில் நிறுத்தம் அனுமதிக்கப்படும் என்று விதி உள்ளது. இந்த ரயிலில் குமரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் இருந்து ஒரு பயணி  கூட 500 கி.மீக்கு மேல் இந்த ரயிலில் பயணம் செய்வது கிடையாது. இதனால் இரணியல் குழித்துறை ரயில் நிலையங்களில் புதிய நிறுத்தங்களுக்கு கோரிக்கை வைக்கும் போது இது போன்ற சுற்றி செல்லும் ரயில்களால் நிறுத்தம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 இந்த ஜெயந்திஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலை மங்களுர், கோவா வழியாக மாற்றி இயக்க வேண்டும் என்று மும்பையை தலைமையிடமாக கொண்ட மத்திய ரயில்வே மண்டலம் சார்பாக பல்வேறு காலங்களில் திட்ட கருத்துரு சமர்பிக்கப்பட்டு கலந்தாலோசிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக இதுவரை இந்த கோரிக்கை நிறைவேறவில்லை. இந்த நிலையில் மத்திய ரயில்வே மண்டலம் சார்பாக இந்த கன்னியாகுமரி – மும்பை ரயிலை புனேயுடன் நிறுத்தி கன்னியாகுமரி – புனே தினசரி ரயில் என இயக்க நடவடிக்கை எடுத்து ரயில்வே வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஒரு சில பகுதிகளில் உள்ள பயணிகளிடையே பெரும் விவாதத்தை கிளப்பி கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்பட்டு வரும் கன்னியாகுமரி – மும்பை ஜெயந்தி ஜனதா ரயிலை அதன் வழித்தடத்தை மாற்றி திருவனந்தபுரம், கோட்டையம், எர்ணாகுளம், மங்களுர், கோவா வழியாக மாற்றி 30 மணி நேரத்தில் மும்பை செல்லதக்க வகையில் அடுத்த ரயில் காலஅட்டவணையில் இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர். இவ்வாறு இந்த ரயிலின் வழித்தடத்தை மாற்றி இயக்கும் போது கன்னியாகுமரியிலிருந்து மங்களுர் மற்றும் கோவாவிற்கும் நேரடியாக தினசரி ரயில் வசதி கிடைக்கும்.

இந்த கன்னியாகுமரி – மும்பை ரயிலை மங்களுர், கோவா வழியாக கொங்கன் பாதையில் மாற்றி விடமுடியாத நிலை இருந்தால் இந்த ரயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்தி விட்டு இதற்கு மாற்று ஏற்பாடாக திருவனந்தபுரம் – மும்பை நேத்திராவதி ரயிலை கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு செய்து இயக்கலாம் என்று கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *