• Fri. Mar 29th, 2024

ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறியான கலைஞர்களுக்கு, ‘நவரசா’ மூலம் உதவிய இயக்குனர்கள்.., நன்றி சொன்ன நடிகர் நாசர்!..

Byகுமார்

Aug 8, 2021

தமிழ் சினிமாவில் ஒருவருட காலம் படப்பிடிப்புகள் எதுவும் இன்றி இருந்தது இல்லை 2020 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு, படப்பிடிப்பை நம்பி இருக்கும் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளானது தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் முடிவுகள் முடக்கி வைக்கப்பட்டு இருக்கிறது அதனால் நடிகர் சங்கத்திற்கு நிர்வாகிகள் இல்லை.


இந்த நிலையில், ‘நவரசா’ என்கிற பெயரில் வலைத்தள குறும்படங்களைத் தயாரித்து அதில் கிடைத்த வருவாய் மூலம் திரைப்படத் தொழிலாளர்கள் மற்றும் நாடக நடிகர்களுக்கு மளிகைப்பொருட்கள் வாங்க உதவி புரிந்துள்ளனர் இயக்குநர்கள் மணிரத்னமும் ஜெயேந்திராவும்.
இதற்காக நடிகர் சமூகம் சார்பாக பூமிகா அறக்கட்டளைக்கு நன்றி என்று நடிகர் நாசர் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….


உலகமே இருளில் தத்தளிக்கின்றது. சோடியம் விளக்கு, எல் இ டி விளக்குகளைத் தேடாமல், சின்னஞ்சிறு தீக்குச்சி உரசல்களுக்காக துழாவிக் கொண்டிருக்கும் போது அகல் விளக்காய் வந்தது பூமிகா அறக்கட்டளை.


வெளிச்சம் எவ்வளவு தூரம் பாய்கிறது என்பதல்ல. வெளிச்சம் தோன்றியது என்பது தான் மகத்துவம். மிக மிக நேர்த்தியாகத் திட்டம் வகுத்து அதை நடைமுறைப்படுத்திய பூமிகா டிரஸ்ட் முன் உதாரணமாக இருக்கிறது. அதன் காரண கர்த்தாக்களாகிய இயக்குநர் மணிரத்னம், தயாரிப்பாளர் ஜெயேந்திரன் ஆகிய இருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்வது என் கடமையாகிறது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 400- க்கும் மேற்பட்ட மூத்த நாடக- சினிமா கலைஞர்களுக்கு உதவிக்கரம் நீட்டி ஐந்து மாதஙகளுக்கான பொருள் உதவி செய்திருப்பது பல குடும்பங்களின் இருள் போக்கும் விளக்குகளாகிறது. கலைஞர்கள் அனைவரும் நேரில் சென்று வாங்கிச் சென்றார்கள். பூமிகா டிரஸ்டுக்கு உதட்டளவில் இல்லாமல் ஆழ் மனதிலிருந்து உதவி பெற்ற கலைஞர்கள் சார்பாகவும் நடிகர் சமூகம் சார்பாகவும் நன்றிகளை அர்ப்பணிக்கின்றேன். அவர்கள் நோக்கமும் இலக்கும் வெற்றி அடைவதாக எனக் குறிப்பிட்டுள்ளார் நடிகர் நாசர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *